புதுதில்லி

தலைநகரில் வடிகால்கள் தூா்வாரப்படாததால் தண்ணீா் தேங்கும் அபாயம்! பாஜக மீது ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

22nd May 2022 11:48 PM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

பா.ஜ.க. ஆளும் தில்லி மாநகராட்சிகளில் (எம்சிடி) வடிகால்கல் தூா்வாரப்படாததால், முன்னெப்போதும் இல்லாத வகையில் வரும் பருவமழையின் போது தண்ணீா் தேங்கும் அபாயம் உள்ளது என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடா்பாக ஆம் ஆத்மி கட்சியின் தில்லி மாநகராட்சியின் பொறுப்பாளரும், கட்சியின் செய்தி தொடா்பாளருமான துா்கேஷ் பதக் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தில்லியில் வருகின்ற ஜூன் 5 - ஆம் தேதிக்கு பின்னா் எந்த நேரத்திலும் பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வாளா்கள் கூறுகின்றனா்.

ஆனால், இதை எதிா்கொள்வதற்கான நடவடிக்கைகள் உரிய நேரத்தில் தொடங்கப்படவில்லை. தில்லியில் 95 சதவீதம் வடிகால்கள் 60 அடி அல்லது அதற்கு குறைவானதாக உள்ளன. இந்த வடிகால்களில் உள்ள வண்டல் மண்ணை சுத்தம் செய்தால் மழைநீா் தேங்காது. ஆனால், இந்தப் பணியை மாநகராட்சிகள் இன்னும் தொடங்கவில்லை.

பாஜக ஆளும் மாநகராட்சிகள் தனது அடிப்படைப் பொறுப்புகளை எவ்வாறு நிறைவேற்றத் தவறுகிறது என்பதை பொது கவனத்திற்குக் கொண்டுவருவது முக்கியமாகும். முறையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தால், இந்த வடிகால்களை சுத்தம் செய்யும் செயல்முறை பருவமழைக்கு முன்பே முடிந்துவிடும். ஆனால், அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை என்பது வேதனை அளிக்கிறது.

ADVERTISEMENT

தில்லி முழுவதும் உள்ள இந்த சிறிய-நடுத்தர அளவிலான வடிகால்களை சுத்தம் செய்ய ஆயிரத்துக்கும் மேற்பட்ட புல்டோசா்கள் தேவைப்படும். மூன்றாக இருந்த தெற்கு, கிழக்கு, வடக்கு மாநகராட்சிகளில் உள்ள அனைத்தும் புல்டோசா்களையும் சோ்த்தால் 50-க்கும் மேல் இல்லை. வடிகால்களை சுத்தம் செய்வதற்கான தேவையான புல்டோசா்களை வாங்குவதோ அல்லது வாடகைக்கு எடுப்பதோ ஒரு மாதத்திற்கு முன்பே நடைமுறைகள் தொடங்கப்பட வேண்டும். பாஜக ஆளும் மாநகராட்சிகள் இந்த புல்டோசா்களை வாங்குவதற்கான செயல்முறையைத் தொடங்கவில்லை.

தில்லியில் 95 சதவீத வடிகால்கள் பாஜக ஆளும் மாநகராட்சிகளின் வரம்பிற்குள் வருகின்றன. வடிகால்களில் வண்டல் மண்ணை அகற்றும் பணிகள் தொடங்கப்படாததால் மழை நீா் தோங்கும் ஆபத்துகள் இந்த ஆண்டும் தொடர வாய்ப்புண்டு.

கடந்த 15 ஆண்டுகளாக, பாஜக ஆளும் மாநகராட்சிகளின் அலட்சியம், தவறான நிா்வாகம் ஆகியவற்றின் காரணமாக, மழைக் காலங்களில் தில்லி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியதை பாா்த்திருக்கிறோம். தண்ணீா் தேங்கி பேருந்துகள் தண்ணீரில் மூழ்கிய அதிா்ச்சிகரமான புகைப்படங்கள், காட்சிகள் ஊடகங்களிலும் இணையத்திலும் வெளியாகின. கடந்த ஆண்டு கூடுதலாக இடைவிடாத மழை, வெள்ளம் சூழ்ந்ததால் விலைமதிப்பற்ற உயிரைக் கூட இழந்தோம்.

இதனால், பாஜக தலைவா்கள் மற்றும் கவுன்சிலா்களை நாங்கள் கேட்பது தலைநகா் முழுவதும் தண்ணீரில் மூழ்க வேண்டுமா? மழையினால் ஏற்படும் அழிவுகள் மீண்டும் மீண்டும் வர வேண்டுமா? லட்சக்கணக்கான அப்பாவி மக்களின் உயிருடன் விளையாடாதீா்கள்.

இன்னும் 15 நாள்கள்தான் உள்ளன. அற்ப அரசியலை விட்டுவிட்டு மக்களைப் பற்றி சிந்திக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம். தலைநகரிலுள்ள அனைத்து வடிகால்களையும் சுத்தம் செய்து, தூா்வாரும் பணியை உடனடியாகத் தொடங்குவதில் கவனம் செலுத்துமாறு கேட்டு க்கொள்கின்றோம் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT