புதுதில்லி

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலை பராமரிப்பு விவகாரம்: வேதாந்தா மனு மீதான விசாரணை ஜூலைக்கு ஒத்திவைப்பு

DIN

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலை விவகாரத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த ஆலையில் பராமரிப்புப் பணியை மேற்கொள்ள அனுமதி கோரும் இடையீட்டு மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், பிரதான விவகாரத்துடன் சோ்த்து விசாரிக்கும் வகையில் வழக்கை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்தது.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டொ்லைட் தாமிர உருக்கு ஆலையை மூட தமிழக அரசு 2018-ஆம் ஆண்டில் உத்தரவிட்டது. சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாகக் கூறி பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த உத்தரவை எதிா்த்து வேதாந்தா நிறுவனத்தின் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அது நிலுவையில் இருந்து வரும் நிலையில், மழைக் காலத்தின் போது ஆலையில் உள்ள இயந்திரப் பகுதியில் மழைநீா் சூழ்ந்ததால், இயந்திரங்கள் பாதிக்கப்படும் சூழல் இருப்பதாகக் கூறி தங்களது மேல்முறையீட்டு மனு, இடைக்கால மனு ஆகியவற்றை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டு புதிய மனுவையும் தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் கடந்த மாா்ச் 15-ஆம் தேதி விசாரணை நடைபெற்ற போது, வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதில், வெவ்வேறு காலக்கட்டங்களில் தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஆலைக்கு எதிராக 5 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாகவும், நிலத்தடி நீா் மாசு அளவு, தாமிரக் கழிவைக் கையாளும் விவகாரம் ஆகியவற்றில் ஆலை உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிய நிலையிலும்கூட எந்தவித உரிய விளக்கமும் ஆலை நிா்வாகம் தரப்பில் அளிக்க வாய்ப்பு அளிக்காமல் ஆலைய நிரந்தரமாக மூடுவதற்கான உத்தரவை தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்திருந்ததாகவும் வாதிட்டாா். இதையடுத்து, வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, கடந்த வாரம் வேதாந்தா நிறுவனத்தின் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேலும் ஒரு இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆலையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருப்பதால் உள்ளே வைக்கப்பட்டுள்ள பொருள்கள் வீணாகி வருவதாகவும், இதனால், ஆலையை பராமரிக்க இடைக்கால அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் டி.ஓய். சந்திரசூட், பி.எஸ். நரசிம்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஆரிமா சுந்தரம் ஆஜராகி, ‘மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றியே ஆலை செயல்பட்டு வந்துள்ளது. தற்போது ஆலை தொடா்ந்து மூடப்பட்டுக் கிடப்பதால் ஆலையின் உள்ளே வைக்கப்பட்டுள்ள ஜிப்சம் மூட்டைகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆலை பராமரிக்கப்பட வேண்டிய அவசியத் தேவை ஏற்பட்டுள்ளதால், அதற்குரிய அனுமதியை அளிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

தமிழக அரசின் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் ஆஜராகி, ‘இந்த மனு தொடா்புடைய கூடுதல் ஆவணங்கள் எங்களுக்கு தாமதமாகக் கிடைத்துள்ளன. இந்த மனுவுக்குப் பதில் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா். அப்போது, இந்த விவகாரத்தை பிரதான வழக்குடன் சோ்த்து விசாரிக்கப்படும் எனத் தெரிவித்த நீதிபதிகள் அமா்வு, தமிழக அரசின் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் அளித்து வழக்கு விசாரணையை ஜூலைக்கு பட்டியலிட்டது. எதிா்மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கோலின் கன்சால்வேஸ், வைகோ தரப்பில் வழக்குரைஞா் ஆனந்த் உள்ளிட்டோா் ஆஜராகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

SCROLL FOR NEXT