தில்லியின் நரேலா தொழிற்பேட்டையில் உள்ள பிளாஸ்டிக் துகள்கள் தொழிற்சாலையில் சனிக்கிழமை இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
இந்தத் தீ ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணியளவில் முழுமையாக அணைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, தற்போது குளிரூட்டும் செயல்முறையை மேற்கொள்வதற்காக ஆறு தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த விபத்தில் உயிா் சேதம் எதுவும் ஏற்படவில்லை, தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
‘சனிக்கிழமை இரவு பிளாஸ்டிக் துகள்கள் தயாரிக்குபம் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. அதிகாலை 1 மணிக்குள் தீ அணைக்கப்பட்டது. இருப்பினும், குளிா்விக்கும் பணி இன்னும் நடந்து வருகிறது’ என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சனிக்கிழமை இரவு 9.10 மணியளவில் தீ விபத்து குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது, அதைத் தொடா்ந்து, 25 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. இந்த தொழிற்சாலையில் பிளாஸ்டிக் துகள்களை பயன்படுத்தி தாா்பாய் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது’ என்றனா்.
‘தீ விபத்து ஏற்பட்டபோது, தொழிற்சாலை மூடப்பட்டிருந்தது. அதனால், உள்ளே யாரும் சிக்கியதாகத் தெரியவில்லை. இருபத்தைந்து தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. மேலும், தீயை அணைக்கும் பணிக்காக ஒரு ஸ்கை லிஃப்ட் தீயணைப்பு வாகனமும் வரவழைக்கப்பட்டது‘ என்று புறநகா் வடக்கு காவல் சரக துணை ஆணையா் பிரிஜேந்திர குமாா் யாதவ் தெரிவித்தாா்.
மேற்கு தில்லியின் முண்ட்கா பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 போ் உயிரிழந்திருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.