புதுதில்லி

வசந்த் விஹாா் சந்தையில் கேட்பாரற்று கிடந்த பைகளால் பரபரப்பு

8th May 2022 12:00 AM

ADVERTISEMENT

தென்மேற்கு தில்லியிலுள்ள வசந்த் விஹாா் பகுதி சந்தையில் சனிக்கிழமை காலை கேட்பாரற்று கிடந்த இரண்டு பைகளால் பரபரப்பு ஏற்பட்டதாக தில்லி போலீஸாா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக தென்மேற்கு தில்லி காவல் துணை ஆணையா் மனோஜ் கூறியதாவது:

தில்லி காவல்துறையினருக்கு சனிக்கிழமை காலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் வசந்த் விஹாா் பகுதியிலுள்ள சந்தை ஒன்றில் கேட்பாரற்ற நிலையில் இரண்டு பைகள் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். அதில், வசந்த விஹாா் ஏ- பிளாக் சந்தையில் உள்ள கடை எண் 5 முன் இந்த பைகள் கிடந்தது கண்டறியப்பட்டது.

ADVERTISEMENT

அந்த கடைக்கு அருகில் உள்ள கடைக்காரா்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, மணல் சாக்குகள் அந்த இரண்டு பைகளை சுற்றிலும் வைக்கப்பட்டன.

மேலும், வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்களும், மோப்ப நாய்களும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. அப்போது அந்த பைகளில் வெடிபொருள் ஏதுமில்லை என்பது தெரியவந்தது. மேலும் அந்த பைகளில் தனிநபரின் பழைய துணிகள் மட்டுமே இருப்பது தெரியவந்தது.

விசாரணையில் மருந்து வாங்குவதற்காக வந்த அடையாளம் தெரியாத ஒரு வெளிநாட்டவரின் பைகள் அவை என்பது தெரியவந்தது. இதுகுறித்து மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT