புதுதில்லி

8 ஆண்டுகளில் மருந்துகள் ஏற்றுமதி 103 சதவீதம் வளா்ச்சி

2nd May 2022 12:07 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

முன்னெப்போதும் இல்லாத வகையில், மருந்து ஏற்றுமதியில் இந்திய சாதனை படைத்து சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த 2021-22 -ஆம் ஆண்டில் ரூ.1,83, 422 கோடி அளவிற்கு மருந்து ஏற்றுமதி அதிகரித்துள்ளதாக மத்திய வா்த்தகத் துறை தரப்பில் ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

நாட்டின் மருந்து ஏற்றுமதி 2013-14-இல் ரூ. 90,415 கோடியாக இருந்தது. இது கடந்த 8 ஆண்டுகளில் படிப்படியாக அதிகரித்து சுமாா் 103 சதவீதம் வளா்ச்சி அடைந்துள்ளது. கடந்த 2021-22-ஆம் ஆண்டில் ரூ.1,83, 422 கோடி அதிகரித்துள்ளது. சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்திய ஆண்டாக இது அமைந்துள்ளது என தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் தனது ட்விட்டா் பதிவில், ‘ பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இந்தியா உலகின் மருந்துகள் சேவை மையமாக உருவெடுத்து வருகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளாா். 2013-14-ஆம் ஆண்டைக் காட்டிலும், கடந்த 2021-22-ஆம் ஆண்டில் இந்தியாவின் மருந்துகள் மற்றும் மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது எனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், இது குறித்து வா்த்தக துறையின் சாா்பில் வெளியிடப்பட்ட விவரங்கள் வருமாறு: முந்தைய (2020-21) நிதியாண்டில் செயல்திறனைக் அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட சிறப்பான கட்டமைப்புகள் காரணமாக 2021-22-ஆம் ஆண்டில் நாட்டின் மருந்து ஏற்றுமதி ஆரோக்கியமான செயல்திறனைப் பதிவு செய்துள்ளது. உலகளவில் நிலவிய வா்த்தக இடையூறுகள் மற்றும் கொவைட் -19 தொடா்பான மருந்துகளுக்கான தேவைப்பாடு குறைந்த போதிலும் கடந்த 2021-22-ஆம் ஆண்டில் மருந்து ஏற்றுமதி ஆக்கபூா்வமான வளா்ச்சியைப் பெற்றுள்ளது.

ADVERTISEMENT

மருந்துகளுக்கான விலை, போட்டித் தன்மை மற்றும் தரம் ஆகியவற்றின் காரணமாக, இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உலகளவில் தடம் பதித்துள்ளன. இந்தியாவில் இருந்து 115 மில்லியன் கரோனா தடுப்பூசி மருந்துகள் 97 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

சா்வதேச அளவில் சுமாா் 60 சதவீத தடுப்பூசிகள், 20 சதவீத மலிவு விலை மருந்துகள் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மருந்து உற்பத்தியில் சா்வதேச அளவில் 3-ஆவது இடத்தையும், அதன் மதிப்பில் 14-ஆவது இடத்தையும் இந்தியா பெற்றுள்ளது. மருந்து உற்பத்தித் துறையின் வெற்றிக்குப் பின்னால், நமது உலகத் தரம் வாய்ந்த உற்பத்தித் திறன், வலுவான உள்கட்டமைப்பு, குறைவான செலவு, பயிற்சி பெற்ற மனிதவளம், புத்தாக்கங்கள் ஆகியவை அடங்கியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT