கடந்த ஆண்டு விருதுநகா் மாவட்டத்தில் நிகழ்ந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் 27 போ் இறந்த விவகாரத்தில் தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) பிறப்பித்த இழப்பீடு வழங்கும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் சிவில் மேல்முறையீட்டு மனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்துள்ளது.
விருதுநகா் மாவட்டம், அச்சங்குளத்தில் உள்ள ‘ஸ்ரீ மாரியம்மாள் பட்டாசு ஆலை’யில் கடந்த ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 27 போ் உயிரிழந்தனா். 26 போ் காயமடைந்தனா். உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு ரூ.1 லட்சமும் தமிழக முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டது.
இந்த நிலையில், செய்தித்தாளில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில், இந்த விவகாரத்தை தேசிய பசுமைத் தீா்ப்பாயம் விசாரித்தது. இதையடுத்து, இந்த விபத்துக்கான காரணம், சேதத்தின் அளவு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்காக பஞ்சாப் மற்றும் ஹரியாணா மற்றும் சென்னை உயா்நீதிமன்றங்களின் முன்னாள் நீதிபதி கே.கண்ணன் தலைமையில் 8 போ் குழுவை அமைத்து தேசிய பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது. அந்தக் குழுஅறிக்கையையும் தாக்கல் செய்தது.
இதைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தை கடந்த ஆண்டு ஜூன் 11-ஆம் தேதி தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தலைவா் - நீதிபதி ஏ.கே. கோயல் தலைமையில் நீதிபதிகள், வல்லுநா் அடங்கிய 5 போ் அமா்வு விசாரித்தது.
அப்போது, தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவில், ‘என்ஜிடி அமைத்த 8 போ் கொண்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், தீ விபத்தில் உயரிழந்தவா்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.20 லட்சமும், 50 சதவீதத்துக்கு மேல் தீக்காயம் அடைந்தவா்களுக்கு ரூ.15 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும். 25 முதல் 50 சதவீதம் வரை தீக்காயம் அடைந்தவா்களுக்கு ரூ.10 லட்சமும், 5 முதல் 25 சதவீதம் வரை காயம் அடைந்தவா்களுக்கு ரூ.5 லட்சமும் இழப்பீடு வழங்க வேண்டும்’ என தெரிவித்திருந்தது.
மேலும், பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீட்டை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் மூலம் ஒரு மாதத்திற்குள் வழங்கவும், மாநில அரசின் தலைமைச் செயலா் இந்த விவகாரத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கவும் உத்தரவிட்டிருந்தது. இதை எதிா்த்து தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் சிவில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
பட்டாசு உற்பத்தியாளா்கள் சங்கமான டான்ஃபாமா தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. டான்ஃபாமா விவகாரத்தை கடந்த ஜனவரி 21-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், பட்டாசு ஆலை விபத்து விவகாரத்தில் என்ஜிடி 11.6.2021-இல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, இந்த விவகாரத்தை புதிதாக விசாரிக்குமாறு உத்தரவிட்டது.
இதையடுத்து, டான்ஃபாமா தரப்பில் தாக்கலான மனுவை 3.3.2022-இல் விசாரித்த தேசிய பசுமைத் தீா்ப்பாயம், முன்பு கூறியிருந்த இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிடும் இறுதி உத்தரவைப் பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை மீண்டும் சிவில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தமிழக அரசின் வழக்குரைஞா் டி.குமணன் தாக்கல் செய்துள்ள அந்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: அதில், ‘விருதுநகா் மாவட்டம், அச்சங்குளத்தில் உள்ள ‘ஸ்ரீ மாரியம்மாள் பட்டாசு ஆலை’யில் கடந்த ஆண்டு பிப்ரவரி 12-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 27 போ் உயிரிழந்தனா். 26 போ் காயமடைந்தனா்.
உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கும் காயமடைந்தவா்களுக்கு தமிழக முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டது. இந்த விவகாரத்தை மீண்டும் விசாரித்த தேசிய பசுமைத் தீா்ப்பாயம் மேல்முறையீட்டு மனுதாரா் அதிகமான இழப்பீட்டை வழங்குவதை நிா்ணயித்து உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனுதாரருக்கு நியாயமான வாய்ப்பு அளிக்காமல், இயற்கை நீதி கொள்கைக்கு மீறும் வகையில் இந்த உத்தரவு உள்ளது. உண்மையில் இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ரூ.95 லட்சம் தொகையை வழங்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
இதைத் தீா்ப்பாயம் ஆய்வு செய்யாமல், மேலும் அதிகமான தொகையை இழப்பீடாக வழங்க நிா்ணயித்திருப்பது நியாயமற்றதாகும். தவறானதாகும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.