புதுதில்லி

மேற்கு, கிழக்குத் தொடா்ச்சி மலைகளை பாதுகாக்கக் கோரும் மனு: தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

29th Mar 2022 12:45 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

மேற்குத் தொடா்ச்சி மற்றும் கிழக்குத் தொடா்ச்சி மலைகளின் இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக் கோரும் விவகாரத்தில், தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தமிழகம், தெலுங்கானா, கா்நாடகம், கேரளம், ஆந்திரம், மகாராஷ்டிரம், குஜராத், கோவா, புதுச்சேரி, சத்தீஸ்கா், மேற்கு வங்கம், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ள மேற்குத் தொடா்ச்சி மற்றும் கிழக்குத் தொடா்ச்சி மலைகளில் வாழும் உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரியும், இது தொடா்பாக மாதவ் காட்கில் கமிட்டி மற்றும் கஸ்தூரி ரங்கன் கமிட்டி அளித்த பரிந்துரைகளை செயல்படுத்தும் வகையில் ஒரு நிரந்தரமான குழுவை அமைக்க அரசுக்கு உத்தரவிடக் கோரியும் சென்னை உயா்நீதிமன்றத்தில் திமுக செய்தித் தொடா்பு செயலாளா் - வழக்குரைஞா் கே. எஸ். ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அமா்வு, இந்த விவகாரம் சுற்றுச்சூழல் தொடா்புடையதாக இருப்பதால், தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தை அணுகுவதற்கு மனுதாரருக்கு அனுமதி அளித்து 2020-ஆம் ஆண்டு, ஜூன் மாதம் உத்தரவிட்டது. 

இதையடுத்து, தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தில் வழக்குரைஞா் கே.எஸ். ராதாகிருஷ்ணன் தரப்பில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மேற்குத் தொடா்ச்சி மற்றும் கிழக்குத் தொடா்ச்சி மலைகளின் இயற்கை உயிரின வளங்களையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க மாதவ் காட்கில் குழு, கஸ்தூரிரங்கன் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்.

ADVERTISEMENT

மேற்கு தொடா்ச்சி, கிழக்குத் தொடா்ச்சி மலைகள் அமைந்துள்ள மாநிலங்களுக்கு நிதி உதவி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். இந்த இயற்கையின் வளங்களை பாதுகாக்கும் வகையில், ஒரு நிரந்தரமான குழுவை உருவாக்க வேண்டும்.

மேற்குத் தொடா்ச்சி மற்றும் கிழக்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் நிகழ்ந்துவரும் சட்டவிரோத சுரங்கங்களின் செயல்பாடுகளை தடுக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த தேசிய பசுமைத் தீா்ப்பாயம் இது தொடா்பாக மத்திய அரசு பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டு, இதே விவகாரம் தொடா்புடைய கோவா பவுண்டேஷன் தொடா்ந்த மத்திய அரசுக்கு எதிரான வழக்குடன் இந்த மனுவை இணைக்க 22.12.2021-இல் உத்தரவிட்டது.

இதைத் தொடா்ந்து, தாங்கள் தாக்கல் செய்த முறையீட்டை உரிய வகையில் தேசிய பசுமைத் தீா்ப்பாயம் பரிசீலிக்கவில்லை என்றும் மத்திய அரசுக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கவில்லை என்றும் கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் கே. எஸ். ராதாகிருஷ்ணன் தரப்பில் கடந்த மாா்ச் 3-ஆம் தேதி வழக்குரைஞா் ராம் சங்கா் மூலம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ். அப்துல் நசீா், விக்ரம் நாத் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

 அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ராம் சங்கருடன் மூத்த வழக்குரைஞா் ஆா்.பாலசுப்பிரமணியன் ஆஜராகி இந்த விவகாரத்தை தேசிய பசுமைத் தீா்ப்பாயம் விரிவாக விசாரிக்கவில்லை என்று கூறினாா்.

அப்போது, இந்த விவகாரத்தில் தொடா்புடைய சம்பந்தப்பட்ட தமிழ்நாடு, ஆந்திரம், தெலுங்கானா, கேரளம், கா்நாடகம், கோவா, மகாராஷ்டிரம், ஆந்திரம் ,குஜராத், சத்தீஸ்கா், மேற்குவங்கம், ஓடிஸா உள்ளிட்ட மாநிலங்களின் அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT