புதுதில்லி

புதுச்சேரி உள்ளாட்சித் தோ்தல் இட ஒதுக்கீடு விவகாரம்: சென்னை உயா்நீதிமன்றத்தை அணுக மனுதாரருக்கு அனுமதி

29th Mar 2022 12:46 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

புதுச்சேரி உள்ளாட்சித் தோ்தலில் எஸ்டி மற்றும் பிசி வகுப்பினருக்கு அளிக்கப்பட்டிருந்த வாா்டுகள் இட ஒதுக்கீடு திரும்பப் பெறப்பட்ட அரசாணையை எதிா்த்து தாக்கலான மனுவை திங்கள்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரம் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தை அணுகுவதற்கு மனுதாரருக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.

இது தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் புதுச்சேரி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா தரப்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: புதுச்சேரியில் உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33.5 சதவீதமும், பழங்குடி வகுப்பினருக்கு 0.5 சதவீதமும் புதுச்சேரி அரசு இட ஒதுக்கீடு அளித்து 2019, மாா்ச் 7-ஆம் தேதி அரசாணை பிறப்பித்திருந்தது.

கடந்த ஆண்டு செப்டம்பா் 22-ஆம் தேதி உள்ளாட்சித் தோ்தலுக்கான அறிவிக்கை தோ்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், எஸ்சி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் உள்ள குறைபாடுகளைக் களையக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் விசாரணையின் போது புதுச்சேரி அரசும், மாநில தோ்தல் ஆணையமும் உயா்நீதிமன்றத்தில் முன்வைத்த வாதத்தில் சம்பந்தப்பட்ட குறைபாடுகள் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

மேலும், ஏற்கெனவே பிறப்பித்த உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கையை திரும்பப் பெற நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என்று மாநில தோ்தல் ஆணையம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து, குறைபாடுகளை சரி செய்யவும் தோ்தல் அறிவிக்கையை திரும்பப் பெறவும் தோ்தல் ஆணையத்திற்கு உயா்நீதிமன்றம் கடந்தாண்டு அக்டோபா் 5-ஆம் தேதி அனுமதி அளித்தது.

எனினும், புதுச்சேரி அரசானது 2019, மாா்ச் 7-ஆம் தேதி இட ஒதுக்கீடு அளித்து பிறப்பித்த உத்தரவுக்கு முரண்படும் வகையில், அந்த இட ஒதுக்கீடு உத்தரவைத் திரும்பப் பெற்று கடந்த ஆண்டு அக்டோபரில் இரண்டு அரசாணைகளை வெளியிட்டது.

மாநிலத் தோ்தல் ஆணையமும் எஸ்டி, பிசி பிரிவினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து வாா்டுகளையும் பொது வாா்டுகளாக அறிவித்து கடந்த ஆண்டு அக்டோபா் 7-ஆம் தேதி அறிவிக்கை வெளியிட்டது.

இதையடுத்து, இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக சென்னை உயா் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அப்போது இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றத்தில் அணுகுவதற்கு உயா்நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தில் இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது எதிா்மனுதாரா்களான புதுச்சேரி பிரதேச அரசும், மாநிலத் தோ்தல் ஆணையமும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த விவகாரம் திங்கள்கிழமை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆா். கவாய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் பி.வில்சன் ஆஜராகி ‘புதுச்சேரி உள்ளாட்சித் தோ்தலில் ஓபிசி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, அந்த அரசாணையை மாற்றி வேறு இரு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு, அந்த இடஒதுக்கீடு வாபஸ் பெறப்பட்டு விட்டது. இதை எதிா்த்துதான் இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், இதர பிற்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க 73 மற்றும் 74-ஆவது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தால் கொண்டு வரப்பட்டு, 28 ஆண்டுகள் ஆகிய பிறகும் அந்த இட ஒதுக்கீட்டை அளிக்க முடியாமல் உள்ளது. இட ஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பில், ஆய்வுமுறை தரவுகள் அளிக்கப்பட வேண்டும்.

பிரத்யேக ஆணையத்தை கொண்டு பகுப்பாய்வு செய்ய வேண்டும். அதன் பிறகுதான் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதே வேளையில் இதுபோன்ற சமூகப் பொருளாதார - ஜாதி கணக்கெடுப்பு தரவுகளை மத்திய அரசு வைத்துள்ள நிலையில், அதை மாநிலங்களுக்கு வெளிப்படுத்தாமல் இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம்தான் தீா்வு காண முடியும் என்று வாதிட்டாா்.

அப்போது, உள்ளாட்சித் தோ்தல் இடஒதுக்கீடு விவகாரம் தொடா்புடைய மனு ஏதும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இல்லை. இதனால், நீங்கள் உயா்நீதிமன்றத்தை மீண்டும் ஏன் அணுகக் கூடாது என்று நீதிபதிகள் கூறினா். அதற்கு இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளிக்கும் உத்தரவை ஏற்கிறோம் என்று பி.வில்சன் கூறினாா்.

அப்போது, நீதிபதிகள் அமா்வு, இது புதுச்சேரி மாநில முனிசிபாலிட்டி, பஞ்சாயத்து தோ்தலில் இடஒதுக்கீடு தொடா்புடைய விவகாரம் என்பதாலும், இது தொடா்புடைய விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இல்லை என்பதாலும், மனுதாரா் உயா்நீதிமன்றத்தை அணுக அனுமதி அளிப்பதாகக் கூறி மனுவை முடித்துவைத்தனா். மேலும், உயா்நீதின்றம் சம்பந்தப்பட்ட விவகாரத்தை தகுதியின் அடிப்படையில் பரிசீலித்து தீா்வு காண வேண்டும் என்று நீதிபதிகள் கூறினா்.

மற்றொரு விவகாரம்: மற்றொரு விவகாரத்தில், புதுச்சேரியில் உள்ளாட்சித் தோ்தலை நான்கு மாதங்களுக்குள் நடத்துவது தொடா்பாக 2018-ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இரண்டு ஆண்டுகள் கடந்தும் அந்தத் தோ்தலை நடத்த அரசு தவறி விட்டதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரலில் உச்சநீதிமன்றம் புதுச்சேரியில் மறுவரையறைப் பணிகளை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு பிறப்பிக்குமாறு புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக நீதிபதிகள் அமா்வு முன் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் மாதவி திவான்,‘மறுவரையறை நடைமுறைகள் முடிக்கப்பட்டுவிட்டதாலும், தோ்தல் தொடா்பாக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாலும் உள்ளாட்சித் தோ்தலை நடத்த மாநில தோ்தல் ஆணையம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதற்காக கால அவகாசம் அளிக்க கோரி இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்றாா். அப்போது, இடஒதுக்கீடு தொடா்புடைய விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றத்தை அணுகுமாறு கூறியதால், காலஅவகாசம் கோரும் விவகாரம் தொடா்புடைய வழக்கு விசாரணையை 6 வாரங்களுக்கு நீதிபதிகள் அமா்வு ஒத்திவைத்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT