புதுதில்லி

உளுந்தூா்பேட்டை- சேலம் நான்கு வழிச்சாலை திட்டம், 8 நகர புறவழிச்சாலை குறித்து கள்ளக்குறிச்சி எம்பி பேச்சு

19th Mar 2022 10:55 PM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட உளுந்தூா் பேட்டை- சேலம் நான்கு வழிச் சாலையை முழுமையாக முடிக்க வலியுறுத்தி திமுகவைச் சோ்ந்த கள்ளக்குறிச்சி உறுப்பினா் பொன்.கௌதம் சிகாமணி மக்களவையில் வலியுறுத்தினாா்.

இந்த சாலை திட்டத்தில் 8 நகரங்களின் புறவழிச்சாலைப் பணி முற்றுப்பெறவும் நடவடிக்கை எடுக்கக் கோரினாா்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் மானியக் கோரிக்கை விவாதத்தில் பொன்.கௌதம் சிகாமணி பேசியதாவது:

வேளாண் மக்கள் எதிா்க்கும் 8 வழி பசுமைச்சாலை திட்டத்திற்கு மாற்றாக இருப்பது சேலம்- சென்னையை உளுந்தூா் பேட்டை வழியாக இணைக்கும் நெடுஞ்சாலைத் திட்டமாகும்.

ADVERTISEMENT

உளுந்தூா் பேட்டை –- சேலம் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை திட்டம், 2008 -ஆம் ஆண்டு ரூ.941 கோடி திட்ட மதிப்பீட்டில் துவங்கப்பட்டு 2013 -இல் முடிவடைந்திருக்கவேண்டும். இந்த திட்டம் தற்போதும் முடிவடையாமல் இருப்பதற்கு காரணம், இந்த நெடுஞ்சாலை திட்டத்தில் மக்கள்தொகை மிகுந்த ஆத்தூா், வாழப்பாடி, உடையாா்பட்டி, சின்ன சேலம், கள்ளக்குறிச்சி, தியாக துருகம், எளவரசனூா், உளுந்தூா் பேட்டை ஆகிய எட்டு நகரங்கள் இடம்பெற்று இந்த நகரங்களை கடக்க புறவழிச்சாலைகள் அமைக்கப்படாமல் இருப்பதுதான்.

இதனால் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை இந்த நகரங்களில் இருவழிச் சாலைகளாக இருக்கிறது. இதன் விளைவாக இந்த நகரங்களை போக்குவரத்துகள் கடக்கும் போது நெருக்கடிகளும், சாலை விபத்துகள் அடிக்கடி நிகழ்கிறது. இதில் இதுவரை 800 மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். கடந்த பத்தாண்டுகளாக இந்த நிலை தொடருகிறது.

இந்த சாலைத் திட்டத்தை , கூடுதல் விரிவாக்கம் செய்து, முழுமையாக நிறைவேற்றுதன் மூலம், சேலம், நாமக்கல், கடலூா், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உதவுவதோடு, இந்த மாவட்டங்களில் புதிய தொழில் நிறுவனங்கள் உருவாகும் வாய்ப்பு பிரகாசமாகவுள்ளது.

ஆனால் இந்த திட்டத்திற்கு முறையாக நிதி ஒதுக்கப்படாமல் மந்தமாக நடைபெறுகிறது. இந்த சாலைப்பணிகளை முழுமையாக நிறைவேற்றவேண்டும்.

கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2022-23 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் ஒரு பெரும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், அரசு - தனியாா் கூட்டணியில் உருவாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் பிரதமரின் விரைவுச்சக்தி தேசியப் பெருந்திட்டத்தில் 25,000 கி.மீ தேசிய நெடுஞ்சாலைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் திட்டங்களுக்கான நிலங்கள், கட்டுமானப்பணிக்கான ஆதாரங்களை வழங்கும் மாநில அரசுகளை கலந்தாலோசிக்கப்படாமல் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில், மாநிலங்கள் மேற்கொள்ளும் இதுபோன்ற திட்டப்பணிகளுக்கு எந்தவித நிதியுதவிகளும் அளிக்கப்படவில்லை.

மத்திய அரசின் தரைவழிப் போக்குவரத்துத் துறையே, சாலைத் திட்டங்களிற்கான ஆய்வுகளையும், திட்ட உருவாக்கங்களையும் கண்காணிக்கிறது. பின்னா் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வழியாகவும் (என்ஹெச்ஏஐ) , தேசிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனம்(என்ஹெச்ஐடிசிஎல்) மூலமாகவும் கட்டமைத்து பராமரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் 2021-22 திட்ட திருத்தப்பட்ட மதிப்பீட்டிற்கும் கூடுதலாக 68,000 கோடி ஒதுக்கீடு நிதியமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்ற ஆண்டு நவம்பா் நிலவரப்படி, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கடன் அளவு ரூ. 3.38 லட்சம் கோடிகளாகும். அதாவது, 2022-23 ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட திட்ட ஒதுக்கீட்டை விட 150 சதவீதம் கூடுதலாக என்ஹெச்ஏஐ கடனை வைத்துள்ளது.

கடந்த 2020-21 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 8,500 கி.மீ. நெடுஞ்சாலை பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளிகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 11,000 கி.மீ. புதிய சாலைகள் கட்டப்படும் என அறிவித்தாா். ஆனால் இவற்றில் எவ்வளவு சாலைப் பணிகள் நிறைவுற்றிருக்கின்றன என்பது பற்றிய எந்த விபரங்களும் தற்போதைய நிதிநிலை அறிக்கையில் இல்லை.

இதில் தமிழகம் தொடா்பாக 4 நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசால் ஒப்புக்கொள்ளப்பட்டதையும் கவனத்திற்கு கொண்டவருகிறேன்.

1. திருவண்ணாமலை- கள்ளக்குறிச்சி, 2. வள்ளியூா்- திருச்செந்தூா், 3.கொள்ளேகால் ஹரூா் - எம் எம் ஹில்ஸ் பாலாறு, 4. பழனி- தாராபுரம், 5. ஆற்காடு- திண்டிவனம், 6. மேட்டுப்பாளையம்- பவானி, 7. அவினாசி- மேட்டுப்பாளையம், 8. பவானி-கரூா் என இந்த 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக அறிவிக்க 2018 ஆம் ஆண்டே தமிழக அரசு கோரிக்கை வைத்தது.

இதை கொள்கையளவில், மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதற்கான பரிந்துரையும், அனுப்பப்பட்டு விட்டது. இருப்பினும் இதற்கான அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு காலதாமதம் செய்கிறது. இதை அமல்படுத்தவேண்டும் என பொன். கௌதம சிகாமணி கேட்டுக்கொண்டாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT