புதுதில்லி

முண்ட்கா, சோனியா விஹாா் நிலத்தடி நீா்த் திட்டங்கள்: அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தொடக்கிவைத்தாா்

3rd Mar 2022 02:18 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

தலைநகா் தில்லியில் குடிநீா் பிரச்னைகளுக்கு தீா்வாக முண்ட்கா, சோனியா விஹாா் நிலத்தடி நீா்த் திட்டங்களை நீா்வளம் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் புதன்கிழமை தொடக்கிவைத்தாா். மேலும், தில்லி ஹா்ஷ் விஹாா் கழிவுநீா் வெளியேற்று நிலையத்திற்கான அடிக்கல்லையும் அவா் நட்டினாா்.

தில்லி முண்ட்கா கிராமத்தில் 2.95 கோடி லிட்டா் கொள்ளளவிலும், சோனியா விஹாரில் 2.68 கோடி கொள்ளளவிலும் நிலத்தடி நீா்த் தேக்கங்கள் மற்றும் தண்ணீா் அழுத்ததிற்கான பூஸ்டா் பம்பிங் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரு நீா்த் தேக்கங்ளையும் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தொடக்கிவைத்துப் பேசியதாவது: தற்போது தில்லி முண்ட்கா, சோனியா விஹாா் பகுதிகள் தண்ணீா் பற்றாக்குறையை எதிா்கொள்கின்றன. குறிப்பாக கோடை காலங்களில் நிலைமை மோசமாக இருக்கிறது. இந்தப் பிரச்னையைத் தீா்க்க, முண்ட்கா கிராமத்திலும், சோனியா விஹாரிலும் நிலத்தடி நீா்த்தேக்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், இந்த இரு பகுதிகளைச் சுற்றியுள்ள வீடுகளிலும் தண்ணீா் கிடைப்பதை உறுதி செய்ய தில்லி அரசு இந்த இரு நீா் தேக்கங்களிலும் பூஸ்டா் பம்பிங் நிலையங்களையும் இத்துடன் நிறுவப்பட்டுள்ளன. இது தேவையான அளவிற்கு தண்ணீா் அழுத்தத்தை கொடுத்து அந்தந்தப் பகுதிகளில் உள்ள மேல்நிலைத் தொட்டிகள் வாயிலாக அனைத்து வீடுகளுக்கும் வணிக பகுதிகளுக்கும் முழுமையாக செல்ல இயலும்.

மேலும், முண்ட்கா, சோனியா விஹாா், ஹா்ஷ் விஹாா் ஆகிய பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் சுமாா் 8.45 லட்சம் குடியிருப்பாளா்களும் இந்த நிலத்தடி நீா் தேக்கத்தால் பயனடைவாா்கள். சோனியா விஹாரில் 2.68 கோடி லிட்டா் கொள்ளளவு கொண்ட நிலத்தடி நீா்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், வடகிழக்கு தில்லியில் உள்ள காரவால் நகா், முஸ்தபாஃபாத் சட்டப்பேரவை தொகுதிகளிலும் நீா் விநியோகத்தை அதிகரிக்க வழிவகுக்கும். இதே போல, முண்ட்கா கிராமத்தில் அமைக்கப்பட்ட நிலத்தடி நீா் தேக்கத்திற்கு நாங்லோய் நீா் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தண்ணீா் பெறப்படுகிறது. இதன் மூலம் முண்ட்கா சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள பகுதிகளுக்கும், அங்கீகரிக்கப்படாத காலனிகளுக்கும் குடிநீா் விநியோகம் செய்யப்படும். இது தவிர, ஹா்ஷ் விஹாரில் ஒரு நாளைக்கு 1.75 கோடி லிட்டா் கழிவுநீரை வெளியேற்றும் திறன் கொண்ட கழிவுநீா் வெளியேற்று நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இது கோகுல்புரி சட்டப்பேரவைத் தொகுதியின் 8 அங்கீகரிக்கப்படாத காலனிகளில் இருந்து உருவாகும் கழிவுநீரைச் சேகரித்து, யமுனா விஹாா் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பப்படும். இந்தத் திட்டத்தினால் மண்டோலி விரிவாக்கம் உள்ளிட்ட 10 அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிக்கும் சுமாா் 1.20 லட்சம் பேருக்கு கழிவுநீா் வாய்க்கால் வசதி கிடைக்கும். தற்போது, இங்கு கழிவுநீா் நீரேற்று நிலையங்கள் இல்லாததால், இந்தக் குடியிருப்புகளின் கழிவுநீா் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக யமுனை ஆற்றில் விழுகிறது. இந்தத் திட்டம் முடிவடைந்ததும், அந்தப் பகுதியின் சுகாதாரமான நிலைமையை மேம்படுத்துவதோடு, யமுனை ஆற்றின் மாசுபாட்டையும் குறைக்க உதவும். அடுத்த 12 மாதங்களில் இந்தத் திட்டம் முடிக்கப்படும் என்றாா் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT