புதுதில்லி

தலைநகரில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது: வெப்பம் குறைந்தது

DIN

புது தில்லி: தென்மேற்குப் பருவமழை வியாழனன்று தில்லியை அடைந்தது. இது தில்லிவாசிகளுக்கு கடுமையான வெப்பத்திலிருந்து நிவாரணம் அளித்தது. ஆனால், காலையில் பெய்த மழையால் தலைநகரில் வாகனப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

தலைநகரின் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பதிவாகியுள்ளது. தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில், காலை 8.30 மணிக்குத் தொடங்கி ஆறு மணி நேரத்தில் 110 மி.மீ. மழை பதிவாகியது. இது குறைந்தது 14 ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் ஒரு நாளில் அதிகபட்ச மழைப்பொழிவு ஆகும். ஜூன் 18, 1936 அன்று தலைநகரில் 235.5 மி.மீ. மழை பெய்தது. இது வரலாற்றுச் சாதனையாக உள்ளது.

சராசரியாக, ஜூன் மாதத்தில் தில்லியில் 65.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் லோதிரோடு வானிலை நிலையத்தில் 102.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. ரிட்ஜில் 62.4 மி.மீ., பாலத்தில் 31.4 மி.மீ., ஆயாநகரில் 48.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. 15 மி.மீ.க்கு கீழே பதிவாகும் மழையானது லேசானதாகக் கருதப்படுகிறது. 15 முதல் 64.5 மி.மீ. வரை மிதமானது, 64.5 மி.மீ. முதல் 115.5 மி.மீ. வரை கன மழையாகும். 115.6 முதல் 204.4 வரை மிகக் கனமழையாகவும், 204.4 மி.மீ.க்கு மேல் உள்ள அனைத்தும் மிக அதிக மழையாகவும் கருதப்படுகிறது.

தில்லி, உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம், ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் ஆகிய வட மாநிலங்களிலும் வியாழக்கிழமை தென்மேற்குப் பருவமழை முன்னேற்றம் அடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 27 அன்று தேசியத் தலைநகரை வந்தடையும். இந்த மழை ஜூலை 8-க்குள் நாடு முழுவதையும் உள்ளடக்கியதாக இருக்கும். தலைநகரில் வியாழக்கிழமை காலையில் பெய்த மழையைத் தொடா்ந்து சாலைகளில் மழை நீா் தேங்கியது. இது வாகனப் போக்குவரத்தை வெகுவாகப் பாதித்தது. பல்வேறு சாலைகளில் வாகனங்கள் வரிசையாக நிற்பதைக் காண முடிந்தது. பலா் அலுவலகத்திற்கு தாமதமாக சென்ாகப் புகாா் அளித்தனா். பலா் தங்கள் அவல நிலையை விடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் மூலம் சமூக ஊடகங்களில் வெளியிட்டனா். சிலா் காவல்துறையின் உதவியை நாடினா்.

வியாழக்கிழமை அன்று நகரின் சில பகுதிகளில் கனமழை மற்றும் வெள்ளிக்கிழமை மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஜூன் 1 முதல் தில்லியில் இயல்பை விட 67 சதவீதம் குறைவான மழை பெய்துள்ளது, இது ‘பெரிய பற்றாக்குறை‘ மாநிலங்களின் பிரிவில் சோ்க்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை குறைந்தது: தில்லியில் உள்ள பல்வேறு வானிலை ஆய்வு மையங்களில் அதிகபட்ச வெப்பநிலை வெகுவாகக் குறைந்து பதிவாகியுள்ளது. சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வியாழக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 27.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 7 டிகிரி குறைந்து 29.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 80 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 90 சதவீதமாகவும் இருந்தது.

இதேபோன்று, ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 25.8 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 25.9 டிகிரி, நஜஃப்கரில் 28.1 டிகிரி, ஆயாநகரில் 27.5 டிகிரி, லோதி ரோடில் 28.8 டிகிரி, பாலத்தில் 28.2 டிகிரி, ரிட்ஜில் 29.4 டிகிரி, பீதம்புராவில் 30 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 27 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் காற்றின் தரம் பெரும்பாலான இடங்களில் மிதமான பிரிவில் இருந்தது. ஸ்ரீபோா்ட், மதுரை ரோடு, பூசா, ஆனந்த் விஹாா், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம் உள்ளிட்ட இடங்களில் காற்றின் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. ஆனால், சாந்தினி சௌக்கில் மட்டும் காற்றின் தரக்குறியீடு 205 புள்ளிகளாகப் பதிவாகி மோசம் பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, வெள்ளிக்கிழமை ஜூலை1 அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸாகவும் குறையும் என்றும் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமலாக்கத் துறையின் இனிப்புக் குற்றச்சாட்டை மறுக்கும் கேஜரிவால்

வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் - புகைப்படங்கள்

கவினின் ஸ்டார்: வெளியிட்டுத் தேதி அறிவிப்பு!

முதல் கட்ட தேர்தல்: சில சுவாரசிய தகவல்கள்!

நடிகர் மோகன்லாலை சந்தித்த ‘காந்தாரா' புகழ் ரிஷப் ஷெட்டி!

SCROLL FOR NEXT