புதுதில்லி

சென்ட்ரல் விஸ்டா மறுவடிவமைப்புத் திட்டம்: எக்ஸிகியூட்டிவ் என்கிளேவ் கட்டுமானத்திற்கு ஒப்புதல்

DIN

சென்ட்ரல் விஸ்டா மறுவடிவமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக "எக்ஸிகியூட்டிவ் என்கிளேவ்' கட்டுமானத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை தில்லி மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (எஸ்இஐஏஏ) வழங்கியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 பிரதமருக்கான புதிய அலுவலகம், அமைச்சரவை செயலகம், இந்தியா ஹவுஸ் மற்றும் தேசிய பாதுகாப்புக் கவுன்சில் செயலகம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் எக்ஸிகியூட்டிவ் என்கிளேவ் கட்டுமானத்தின் போது, இந்தப் பணியை மேற்கொண்டு வரும் நிறுவனமான மத்திய பொதுப்பணித் துறை (சிபிடபிள்யுடி), 487 மரங்களை இடமாற்றம் செய்யும்.
 ஜனவரி 31-ஆம் தேதி சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்கான முன்மொழிவை முதலில் எடுத்துக் கொண்ட தில்லி மாநில நிபுணர் மதிப்பீட்டுக் குழு, தளத்தில் இருந்து அதிக விகிதத்தில் மரங்களை அகற்றுவதற்கான மத்திய பொதுப்பணித் துறையின் திட்டம் குறித்து கவலை தெரிவித்தது.
 இதைத் தொடர்ந்து, மத்திய பொதுப் பணித் துறை பின்னர் முன்மொழிவைத் திருத்தியது. இடமாற்றம் செய்யப்பட வேண்டிய மரங்களின் எண்ணிக்கையை 630-இலிருந்து 487-ஆகக் குறைத்தது. தளத்தில் தக்கவைக்கப்பட வேண்டிய மரங்களின் எண்ணிக்கையை 154- இலிருந்து 320- ஆக உயர்த்தியது. கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதற்காக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு திருத்தப்பட்ட முன்மொழிவை பரிந்துரைக்க தில்லி மாநில நிபுணர் மதிப்பீட்டுக் குழு முடிவு செய்தது.
 எவ்வாறாயினும், சுற்றுச்சூழ்ல தாக்க மதிப்பீட்டு ஆணையம் இந்த விஷயத்தை மீண்டும் தில்லி மாநில நிபுணர் மதிப்பீட்டுக் குழுவுக்கு (எஸ்இஏசி) அனுப்பியது. தில்லி அரசால் அறிவிக்கப்பட்ட மரம் மாற்றுக் கொள்கை- 2020 செயல்படுத்தப்படுவதை ஆய்வு செய்ய வரையறுக்கப்பட்ட கொள்கையின் அனைத்து அம்சங்களும் திட்டத்தில் இணங்குகின்றனவா என்பது குறித்து கேட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, சுற்றுச்சூழ்ல தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் சமீபத்திய கூட்டத்தில், இந்த திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது.
 ரூ.1,381 கோடி மதிப்பீட்டிலான திருத்தப்பட்ட திட்டத்தின்படி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, பிளாட் பகுதியில் 80 சதுர மீட்டருக்கு ஒரு மரம் இருக்கும் வகையில், பொதுப்பணித் துறை, தளத்தில் 1,022 மரங்களை பராமரிக்கும். மேலும், 47,000 சதுர மீட்டர் பரப்பளவை இடித்துவிட்டு அந்த இடத்தில் 90,000 சதுர மீட்டர் பரப்பளவில் ஐந்து கட்டடங்கள் கட்டப்படும்.
 சென்ட்ரல் விஸ்டா மறுவடிவமைப்புத் திட்டத்தில் புதிய நாடாளுமன்றக் கட்டடம், பொது மத்திய செயலகம், குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரையிலான 3 கி.மீ. ராஜபாதையை மறுசீரமைத்தல், பிரதமரின் புதிய அலுவலகம் மற்றும் வசிப்பிடம் மற்றும் குடியரசுத் துணைத் தலைவருக்கான புதிய என்கிளேவ் இடம் பெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலாவதி தேதி குறிப்பிடாத குடிநீா்: ரூ.5 ஆயிரம் அபராதம் விதிப்பு

வாக்கு ஒப்புகைச் சீட்டு வழக்கில் இன்று தீா்ப்பு

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

SCROLL FOR NEXT