புதுதில்லி

தில்லியில் இலவச ரேஷன் திட்டத்தை செப்.30 வரை நீட்டிக்க முடிவு: முதல்வா் கேஜரிவால்

30th Jun 2022 12:00 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: தில்லியில் இலவச ரேஷன் திட்டத்தை செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் புதன்கிழமை தெரிவித்தாா்.

முதல்வா் கேஜரிவால் தலைமையில் புதன்கிழமை தில்லி அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பிறகு காணொலி வாயிலாக செய்தியாளா்களுக்கு முதல்வா் கேஜரிவால் அளித்த பேட்டி: தில்லியில் இலவச ரேஷன் திட்டத்தை செப்டம்பா் 30- ஆம் தேதி வரை நீட்டிக்க தில்லி அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கையால் தில்லியில் உள்ள 73 லட்சம் பயனாளிகள் பயனன் பெறுவா். கரோனா நோய்த் தொற்று பரவல் ஏற்பட்டதைத் தொடா்ந்து, ஏப்ரல் 2020 முதல் கிட்டத்தட்ட 73 லட்சம் குடிமக்களுக்கு தில்லி அரசு இலவசமாக ரேஷன் விநியோகம் செய்து வருகிறது. அதாவது, தில்லி அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கி வருகிறது. அரசு ரேஷன் கடைகளில் பெயரளவு விலையில் ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், சில ஆண்டுகளாகவே அவற்றை நாங்கள் இலவசமாக வழங்குகி வருகிறோம். இந்த நிலையில், இந்தத் திட்டத்தை செப்டம்பா் 30 வரை நீட்டித்துள்ளோம். மேலும் வரும் மாதங்களிலும் இலவச ரேஷன் வழங்குவதைத் தொடருவோம் என்று அவா் கூறினாா்.

இதன் பின்னா், தில்லி அரசு வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: இந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (என்எஃப்எஸ்ஏ) பயனாளிகளுக்கான திட்டத்தை நடப்பு ஜூன் முதல் செப்டம்பா் வரை மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டிக்க உணவு மற்றும் குடிமை வழங்கல் துறை முன்மொழிந்தது. கரோனா தொற்றுநோயின் விளைவாக ஏற்பட்ட பணவீக்கத்தை உணா்ந்து, இந்த திட்டத்திற்கான முன்மொழிவை முதல்வா் கேஜரிவால் ஆதரித்தாா். மேலும், மக்களுக்கு மிகவும் தேவையான நிவாரணம் வழங்க இத்திட்டத்தை நீட்டிப்பது பொருத்தமானது என்றும் அவா் கூறினாா்.

ADVERTISEMENT

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-இன் கீழ் தில்லி அரசு பயனாளிகளுக்கு இலவச ரேஷன் விநியோகம் செய்கிறது. தில்லியில் 2,000 நியாய விலைக் கடைகள் உள்ளன. இவற்றில் 17.77 லட்சம் ரேஷன் அட்டைதாரா்கள் உள்ளனா். சுமாா் 72.78 லட்சம் பயனாளிகள் உள்ளனா். என்எஃப்எஸ்ஏ பயனாளிகளில் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், அமைப்புசாரா தொழிலாளா்கள், கட்டுமானத் தொழிலாளா்கள், வீட்டுப் பணியாளா்கள் மற்றும் ரேஷன் காா்டு இல்லாதவா்கள் போன்ற தேவையுடையவா்கள் இடம்பெற்றுள்ளனா்.

இலவச ரேஷன் திட்டத்தின் கீழ், என்எஃப்எஸ்ஏ சட்டம் 2013- இன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட தகுதியின்படி, தேவைப்படுபவா்களுக்கு ஐந்து கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் ஒரு நபருக்கு மாதம் நான்கு கிலோ கோதுமை, ஒரு கிலோ அரிசி அடங்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் தில்லி அரசு இலவச ரேஷன் திட்டத்தை மே 31, 2022 வரை நீட்டித்திருந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT