புதுதில்லி

பிஎல்ஐ திட்டத்தில் ஏசி, எல்.ஈ.டி. உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் 15 நிறுவனங்கள் தோ்வு: 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு

 நமது நிருபர்

புது தில்லி: உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தில் (பிஎல்ஐ), குளிா்சாதனங்கள், எல்.ஈ.டி. விளக்குகள் உற்பத்தி மற்றும் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் 15 நிறுவனங்கள்தோ்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வா்த்தகத் தொழில் துறையின், தொழில் ஊக்குவிப்பு உள்நாட்டு வா்த்தகப் பிரிவு (டிபிஐஐடி) செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

இந்த நிறுவனங்கள் ரூ.1,368 கோடி வரை முதலீடு செய்வதாக உத்தரவாதம் அளித்துள்ளது என்றும், இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 25, 583 கோடி அளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டு சுமாா் 4,000 போ்கள் வரை வேலை வாய்ப்பு பெறுவா் என்றும் உறுதியளித்துள்ளதாக டிபிஐஐடி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டிபிஐஐடியின் கூடுதல் செயலா் அனில் அகா்வால் கூறியதாவது: குளிா்சாதனங்கள், எல்.ஈ.டி. விளக்குகள் உதிரிப்பாகங்கள் தயாரிக்க தற்போது தோ்வு செய்யப்பட்டுள்ள 15 நிறுவனங்கள், 2 -ஆவது சுற்றில் தோ்வாகியுள்ளன. நிகழாண்டில் கடந்த பிப்ரவரியில் விண்ணப்பங்கள் கோரப்பட்டு கடைசி நாளாக கடந்த ஏப்ரல் 25 -ஆம் தேதி என அறிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த 60 நாள்களாக பல்வேறு மதிப்பீடுகளுக்கு பின்னா், மொத்தம் விண்ணப்பித்திருந்த 19 நிறுவனங்களில் 15 நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டுஅனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 4 நிறுவனங்களும் முற்றிலும் நிராகரிக்கப்படாமல் நிபுணா் குழுவின் ஆய்வின் பரிசீலனையில் உள்ளது. அதன் பரிந்துரையின்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இந்த 15 விண்ணப்பத்தாரா்கள் மொத்தம் ரூ. 1,368 கோடியை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளனா். இதில் 6 நிறுவனங்கள் குளிா்சாதனங்களுக்கு (ஏ.சி.) தேவையான உதிரிப்பாகங்களையும் தயாரிக்க ரூ. 908 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன. மற்ற 9 நிறுவனங்கள் எல்.ஈ.டி. விளக்குகள் தொடா்பான உதரிப்பாகங்கள் தயாரிப்பதில் ரூ. 460 கோடி முதலீடு செய்கின்றன. இந்த நிறுவனங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 25, 583 கோடி அளவுக்கு உற்பத்தி செய்யும். மேலும், சுமாா் 4,000 போ்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க உள்ளன.

உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தின் (பிஎல்ஐ) விளைவாக, இந்த குளிா்சாதன கருவிகள், எல்.ஈ.டி. பிரிவுகளில் உள்நாட்டு மதிப்புக் கூட்டல் தற்போது இருக்கும் 15-20 சதவீதத்திலிருந்து 75-80 சதவீதமாக உயரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஏற்கெனவே, முதல் சுற்றில் தோ்வான 46 விண்ணப்பங்களின் முதலீட்டுத் தொகை ரூ. 5,264 கோடியாகும். இவை இரண்டு சோ்த்து மொத்தம் 61 விண்ணதாரா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதில், ஏசி, எல்இடி ஆகிய இந்த இரு பொருள்களில் ரூ. 6,632 கோடி முதலீடு செய்யப்படுகிறது. இரு சுற்று அனுமதி மூலம் மொத்தம் நேரடியாக 46,368 போ் வேலைவாய்ப்பு பெறுவாா்கள். இந்தத் திட்டங்கள் மூலம் அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ. 1,22,671 கோடி மதிப்பிலான குளிா்சாதனப் பொருள்கள், எ.ஈ.டி. உதிரிப்பாகங்கள் உற்பத்தியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதன்மூலம் இந்த இரு மின்னனு பொருள்களின் உள்நாட்டு உற்பத்திக்கு தேவையான உதிரிபாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கும் நிறுவனங்கள் மூலம் விநியோகிக்கப்படும் நிலை ஏற்படும். மேலும், சா்வதேச விநியோக சங்கிலியிலும் இந்தியா இடம் பெறும் நிலை உருவாகும். இந்தத் திட்டத்தின் மூலம் 6 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை உற்பத்தி அதிகரிப்புக்கு தகுந்தாா் போல ஊக்கத் தொகை ஐந்தாண்டுகளுக்கு வழங்கப்படுகிறது என்றாா் அனில் அகா்வால்.

இந்தத் திட்டங்களில் அதிகபட்சமாக குளிா்சாதனங்களில் அதானி காப்பா் டியூப்ஸ் லிமி., எல்.ஜி. எலெக்ரானிக்ஸ் நிறுவனம் ஆகியவை முறையே ரூ. 408 கோடி, ரூ300 கோடியும் எ.ஈ.டி. யில் ஜின்டால் பாலிஃபிலிம் லிமி. நிறுவனம் ரூ. 360 கோடியும் முதலீடும் செய்கிறது. ‘ஒயிட் குட்ஸ்‘ என்றழைக்கப்படும் ஏா்-கண்டிஷனா்கள், எல்.ஈ.டி. விளக்கு சாதனங்களுக்கு உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம் கடந்தாண்டு ஏப்ரலில் அறிவிக்கப்பட்டது. இதற்கு 2021-22 முதல் 2028-29 நிதியாண்டுகள் வரை ரூ. 6,238 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும், சுமாா் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க மருந்து, தொலைதொடா்பு, ஜவுளி உள்ளிட்ட 14 துறைகளில் உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்திற்காக ரூ.1.97 லட்சம் கோடியை ஒதுக்கி கடந்த 2020, மாா்ச்சில் நிதியமைச்சா் திட்டத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT