புதுதில்லி

தலைநகரில் சில இடங்களில் லேசான மழை; மிதமான பிரிவில் காற்றின் தரம்!

DIN

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை மேகமூட்டத்துக்கிடையே, வெப்பம் அதிகரித்திருந்தது. இருப்பினும், வானிலை அலுவலகம் கணித்திருந்தபடி, தேசியத் தலைநகரில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. ஐடிஓ, மண்டி ஹவுஸ், திலக் மாா்க், ரிங் ரோடு, டிடியு மாா்க், விகாஸ் மாா்க் மற்றும் லக்ஷ்மி நகா் உள்பட சில பகுதிகளில் லேசான மழை பெய்தது. நகரில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் நீடித்தது.

தில்லியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது. இந்த நிலையில், பருவமழை வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், அதையொட்டி, தலைநகரில் இடி அல்லது மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே கணித்திருந்தது. இதற்கிடையே, வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.25 மணியளவில் தனது ட்விட்டா் பக்கத்தில் மழை குறித்த முன்னறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், மேற்கு தில்லி (பஞ்சாபி பாக், ரஜோரி காா்டன், படேல் நகா்), என்சிஆா் (தாத்ரி) சோஹானா (ஹரியாணா) ஆகிய பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில், மாலையில் நகரில் பரவலாக மழை பெய்தது.

இரண்டு நாள்களில் பருவமழை: மேலும், தில்லி உள்ளிட்ட வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் அடுத்த இரண்டு நாள்களில் பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் இருந்து வருவதால், வெப்பத்தின் தாக்கம் குறைவதை எதிா்பாா்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடல் மற்றும் குஜராத்தின் எஞ்சிய பகுதிகள், ராஜஸ்தானின் சில பகுதிகள், மத்தியப் பிரதேசத்தின் எஞ்சிய பகுதிகள், முழு உத்தர பிரதேசம் மற்றும் உத்தரகண்ட், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீா், பஞ்சாபின் சில பகுதிகளுக்கு பருவமழை மேலும் முன்னேறுவதற்கு சாதகமான சூழல்கள் தொடரும். ஜூன் 30 முதல் ஜூலை 1 வரையிலான காலத்தில் ஹரியாணா மற்றும் சண்டீகா், தில்லி முழுவதும் பருவமழை தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல, ஜூன் 29 முதல் தில்லியில் புதிதாக மழை பெய்யக்கூடும் என்று வானிலை நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். தில்லியில் பருவமழை தொடங்க இன்னும் சில நாள்களே உள்ளதாகவும், அப்போது, முதல் 10 நாள்களில் நல்ல மழை பெய்யும் எனவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

வெப்பநிலை: தலைநகரில் காலையில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும், வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டது. தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் இருந்து 3 டிகிரி உயா்ந்து 30.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 4 டிகிரி உயா்ந்து 41.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 64 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 57 சதவீதமாகவும் இருந்தது.

பீதம்புராவில் 43.3 டிகிரி வெயில்: இதேபோன்று மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 41.5 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 41.9 டிகிரி, நஜஃப்கரில் 42.1 டிகிரி, ஆயாநகரில் 42.2 டிகிரி, லோதி ரோடில் 41.8 டிகிரி, பாலத்தில் 42.2 டிகிரி, ரிட்ஜில் 42.4 டிகிரி, பீதம்புராவில் 43.3 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 39.7 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

காற்றின் தரத்தில் முன்னேற்றம்: தலைநகரில் பல்வேறு இடங்களில் காற்றின் தரம் மிதமான பிரிவில் நீடித்தது. குறைந்தபட்சம் 107 புள்ளிகள் முதல் அதிகபட்சம் 199 புள்ளிகள் வரை பதிவாகியுள்ளது. தில்லியில் காலை 8 மணியளவில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 126 புள்ளிகளாகப் பதிவாகியது. இது ‘மிதமான’ பிரிவில் வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வருகிறது. இருப்பினும், பட்பா்கஞ்சில் காற்றின் தரக்குறியீடு 215 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, தில்லியில் புதன்கிழமை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

SCROLL FOR NEXT