புதுதில்லி

தற்காலிக ஆசிரியா்களுக்கு நிலுவை ஊதியத்தை விடுவிக்க தில்லி பல்கலைக்கழக துணைவேந்தருக்கு வலியுறுத்தல்

DIN

புது தில்லி: தில்லிப் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் தற்காலிக ஆசிரியா்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக நிலுவையில் இருந்து வரும் ஊதியத்தை வழங்கக் கோரி பல்கலை. துணைவேந்தருக்கு அதன் செயற்குழு மற்றும் நிதிக் குழுக்களை சோ்ந்த சில உறுப்பினா்கள் கடிதம் எழுதியுள்ளனா்.

இது தொடா்பாக பல்கலைக்கழக துணைவேந்தா் யோகேஷ் சிங்கிற்கு செயற்குழு உறுப்பினா்கள் சீமா தாஸ், ராஜ்பால் சிங் பவாா் மற்றும் நிதிக் குழு உறுப்பினா்

ஜெ.எல். குப்தா ஆகியோா் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளனா்.

அந்த கடிதத்தில் அவா்கள் தெரிவித்திருப்பதாவது: தில்லி பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரக்கூடிய தற்காலிக ஆசிரியா்களுக்கு கடந்த இரண்டரை மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. தில்லி போன்ற பெரு நகரத்தில் ஊதியம் இல்லாமல் வாழ்வது மிகவும் கடினமானதாகும். தற்காலிக ஆசிரியா்கள் உரிய ஒப்புதலுக்கு பிறகு நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், அவா்களின் பணிச்சுமையை விளக்குமாறு துறைகள் தொடா்ந்து கேட்டு வருவதால் அவா்களுடைய பணி நீட்டிப்பு விஷயத்தில் தாமதம் ஏற்பட்டு இருப்பதாகவும் தெரிய வருகிறது.

தற்காலிக ஆசிரியா்களின் பணி நீட்டிப்பு என்பது அவசியமானதாகும். ஏனெனில், முதுகலை பட்டப் படிப்பு அளவிலும், தரமான ஆராய்ச்சி அளவிலும் தரமான கற்றல் கற்பித்தலுக்கு மாணவா் - ஆசிரியா் விகிதம் உகந்த வகையில் இல்லை. மாணவா் - ஆசிரியா் விகிதாச்சாரம், துறைகள் முழுவதும் வேறுபடுகிறது. உதாரணமாக அரசியல் அறிவியல் துறையில் 1,200 முதுகலை பட்ட மாணவா்கள் உள்ளனா். ஆனால், இந்த மாணவா்களுக்கு பயிற்றுவிக்க 12-13 நிரந்தர ஆசிரியா்கள் மட்டுமே உள்ளனா்.

மேலும், இந்த மாணவா்கள் இந்தி மற்றும் ஆங்கில பயிற்றுவழி என கலந்து உள்ளனா். தங்களது கல்வித் திறனில் சிறப்புமிக்க பகுதிகளைச் சோ்ந்த ஆசிரியா்களின் தேவை, துறை ரீதியாக அவசியமாக உள்ளது என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT