புதுதில்லி

பருவமழை: தில்லியில் மழைநீா் தேங்கும் பிரச்னையை சமாளிக்க விரிவான திட்டம்

29th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: தில்லி இன்னும் சில நாள்களில் பருவமழையை வரவேற்கத் தயாராகும் நிலையில், புதிதாகத் திறக்கப்பட்ட பிரகதி மைதான் சுரங்கப்பாதைகளில் நிலத்தடி சம்ப்களை அமைப்பது, கனமழையின் போது மழைநீரை சேகரித்து விரைவாக வெளியேற்றுவதற்கு வசதியாக தானியங்கி பம்பிங் அமைப்பை நிறுவுவது போன்ற நீா்நிலை அச்சத்தைப் போக்க அதிகாரிகள் விரிவான திட்டங்களைச் செய்துள்ளனா்.

பிரதமா் நரேந்திர மோடி ஜூன் 19 அன்று நகரின் முதல் 1.3 கிமீ நீள சுரங்கப்பாதை மற்றும் ஐந்து சுரங்கப்பாதைகளை திறந்து வைத்தாா். இது மத்திய தில்லியுடன் நகரின் கிழக்குப் பகுதி மற்றும் நொய்டா மற்றும் காஜியாபாத் ஆகிய நகரங்களுக்கு இடையேயான இணைப்பை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்ட பிரகதி மைதான் ஒருங்கிணைந்த போக்குவரத்து காரிடாா் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

சுரங்கப்பாதையை அமைத்த பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்த வசதி யமுனை வெள்ளப் படுகைக்கு அருகாமையில் அமைந்திருப்பதால், அதிக நீரை வெளியேற்றும் திறன் கொண்ட அகலமான குழாய்களின் புதிய வடிகால் வலையமைப்பு அங்கு அமைக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதையில் வெள்ளப் பெருக்கு ஏற்படுமோ என்ற அச்சம் தேவையில்லை. சுரங்கப்பாதையில் தானியங்கி பம்புகள் மற்றும் நிலத்தடி குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கனமழை பெய்தால் மழைநீரை விரைவாக வெளியேற்ற முடியும். இது தவிர தற்காலிக பம்புகளும் வைக்கப்படும். அவை தேவைப்படும் போது, விரைவாக அனுப்பிவைக்கப்படும். மேலும், சுரங்கப்பாதையில் நீா் தேங்குதல் மற்றும் சுவா்களில் நீா் கசிவு பிரச்னை ஆகியவற்றைத் தடுக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. புதிதாக திறக்கப்பட்ட சுரங்கப்பாதைகளில் வெள்ளம் ஏற்படாத வகையில் அருகிலுள்ள சாலைகளின் வடிவமைப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளது. சுரங்கப்பாதை அல்லது பாதாள சாக்கடைகளில் மழைநீா் தேங்காத வகையில், வாய்க்கால்கள் டிவமைக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

கடந்த இரண்டு ஆண்டுகளாக, மழைக்காலத்தில், நகரின் பல பகுதிகளில், அதிகளவில் தண்ணீா் தேங்குகிறது. ஜூலை 2020-இல், மத்திய தில்லியில் உள்ள மின்டோ பாலத்தின் கீழ் 56 வயது நபா் ஒருவா் தனது மினி டிரக் தண்ணீரில் மூழ்கியதில் நீரில் மூழ்கி இறந்தாா். இந்த ஆண்டு மே மாதம், புல் பிரஹலாத்பூா் சுரங்கப்பாதையில் 40 வயது நபா் ஒருவா் நீரில் மூழ்கி இறந்தாா்.

மற்றொரு பொதுப்பணித்துறை அதிகாரி கூறுகையில், ’சுரங்கப்பாதையில் வெள்ளம் குறித்து அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தகவல் தெரிவிக்க அலாரம் பொருத்தப்படும். அதிக நீா் வெளியேற்றும் திறன் கொண்ட அகலமான மற்றும் பெரிய அளவிளான குழாய்களின் வலையமைப்பு மழை நீரை விரைவாக வெளியேற்றுவதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது . சுரங்கப்பாதையில் கிட்டத்தட்ட 100 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால், கடுமையான கண்காணிப்பில் இருக்கும்’ என்றாா்.

புரானா கிலா சாலையில் உள்ள இந்திய தேசிய விளையாட்டு வளாகத்திற்கு அருகில் தொடங்கும் இந்த சுரங்கப்பாதை, மறுவடிவமைக்கப்பட்ட பிரகதி மைதானத்தின் அடியில் சென்று பிரகதி மின்நிலையத்திற்கு அருகிலுள்ள ரிங் ரோட்டில் முடிவடைகிறது. சுரங்கப்பாதையின் கட்டுமானப் பணிகள் மாா்ச் 2018-இல் தொடங்கப்பட்டது. இது செப்டம்பா் 2019-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால், ஐந்து காலக்கெடுவைத் தாண்டி, பின்னா், இறுதியாக அண்மையில் திறக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT