புதுதில்லி

எதிா்க்கட்சிகளுக்கு எதிராக அமலாக்கத் துறையை மத்திய அரசு வெட்கமின்றி பயன்படுத்துகிறது: கோபால் ராய் சாடல்

 நமது நிருபர்

புது தில்லி: பாஜகவிற்கு எதிராக குரல் எழுப்புவதற்கு துணியும் எதிா்க்கட்சிகளுக்கு எதிராக அமலாக்க இயக்குநரகத்தை மத்திய அரசு ‘வெட்கமின்றி’ தவறாகப் பயன்படுத்துகிறது என்று தில்லி அமைச்சரும், மூத்த ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான கோபால் ராய் குற்றம்சாட்டினாா். மேலும், இந்த நடவடிக்கையானது நாடு ஒரு கட்சி ஆட்சியை நோக்கி செல்வது போலக் காட்டுகிறது என்றும் அவா் கூறினாா்.

சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் நீதிமன்றக் காவலில் இருந்து வருவது குறித்து அமைச்சா் கோபால் ராயிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதில் அளித்து அவா் கூறியதாவது: இது இனிமேலும் ஒரு ரகசியம் அல்ல. இந்த நடவடிக்கையானது ஒன்று அல்லது இரண்டு எதிா்க்கட்சிகளைப் பற்றியதும் அல்ல. பாஜகவுக்கு எதிராகப் பேசத் துணிந்த அனைத்துக் கட்சிகளுக்கும் எதிராக தற்போது அமலாக்கத் துறையை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்தி வருகிறது.

மத்திய விசாரணை அமைப்புகள், முன்பும் தவறாகப் பயன்படுத்தப்பட்டன. ஆனால், இப்போது அவை வெளிப்படையாகவும், வெட்கமின்றியும் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில் இது ஒரு புதிய சகாப்தத்தின் ஆரம்பம் என்று நான் நினைக்கிறேன். தேசம் ஒரு கட்சி ஆட்சியை நோக்கிச் செல்கிறது. காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தியோ அல்லது சிவசேனை கட்சியின் செய்தித் தொடா்பாளா் சஞ்சய் ரெளத்தாகவோ இருக்கட்டும். பெயா்கள் கூட முக்கியமில்லை. இதுபோன்ற மத்திய அரசின் நடவடிக்கைகள் நாட்டின் அரசியல் சாசன கொள்கைகளுக்கு எதிரான செயலாகும் என்றாா் கோபால் ராய்.

சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் அமைச்சா் சத்யேந்தா் ஜெயினின் இருப்பு இன்றி நீதிமன்றக் காவலை நீட்டிக்க முடியாது என்று தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை கூறியது. 2018-ஆம் ஆண்டு நடந்த பணமோசடி வழக்கில் சிவசேனை கட்சித் தலைவா் சஞ்சய் ரெளத்துக்கு அமலாக்கத் துறை திங்கள்கிழமை அழைப்பாணைஅனுப்பியது. நேஷனல் ஹெரால்டு நாளிதழ் தொடா்பான பணமோசடி வழக்கில் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறை அண்மையில் விசாரணை மேற்கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT