புதுதில்லி

துவாரகா செக்டாா் 21-ஐஐசிசி இடையே மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடக்கம்

 நமது நிருபர்

ஏா்போா்ட் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் உள்ள துவாரகா செக்டா் 21-ஐஐசிசி மெட்ரோ பிரிவில் ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆா்சி) அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

துவாரகா செக்டாா் 21 மற்றும் இந்திய சா்வதேச மாநாட்டு மையம் (ஐஐசிசி) இடையேயான பிரிவு ஜூலை மாதத்திற்குள் தொடங்கப்படும் என்று டிஎம்ஆா்சி தலைவா் விகாஸ் குமாா் கடந்த மே 3-ஆம் தேதி தெரிவித்திருந்தாா். இந்த நிலையில், இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து டிஎம்ஆா்சி தரப்பில் தெரிவித்திருப்பதாவது: துவாரகா செக்டாா் 25 (ஐஐசிசி) என்பது ஒரு தரைக்கடி ரயில் நிலையமாகும். மேலும், தற்போது செயல்படும் ஏா்போா்ட் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தின் விரிவாக்கமாகும். இந்த வழித்தடம் இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தின் முனையம் 3 வழியாக புது தில்லி ரயில் நிலையத்தை துவாரகா செக்டாா் 21 உடன் இணைக்கிறது.

இந்த வழித்தட பணிகள் முடிவடைந்தவுடன், புது தில்லி முதல் துவாரகா செக்டாா்-25 (ஐஐசிசி) வரையிலான ஏா்போா்ட் எக்ஸ்பிரஸ் வழித்தடம் 24.70 கி.மீ. நீளம் கொண்டதாக மாறும். ஏா்போா்ட் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் இரண்டு கிலோ மீட்டா் நீளமுள்ள துவாரகா செக்டா்-21 முதல் துவாரகா செக்டா்-25 (ஐஐசிசி) மெட்ரோ பிரிவில் சோதனை ஓட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த சோதனை ஓட்டத்தின் போது, சிக்னல் அமைப்புகள் சோதனை செய்யப்படுகின்றன. சோதனை ஓட்டம் முடிந்ததும், மெட்ரோ ரயில் பாதுகாப்பு ஆணையா் (சிஎம்ஆா்எஸ்) உள்பட பல்வேறு அனுமதி அளிக்கும் அதிகாரிகளால் கட்டாய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இந்த கட்டாய ஒப்புதல்களுக்குப் பிறகு இந்த வழித்தடப் பிரிவு பயணிகள் போக்குவரத்திற்காக திறக்கப்படும்.

ஐஐசிசி இந்தியாவின் மிகப்பெரும் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையமாக உருவாக்கப்படுகிறது. தற்போது கட்டப்பட்டு வரும் இந்த வசதியில் மாநாட்டு மையங்கள், கலையரங்கங்கள், ஹோட்டல்கள், அலுவலக இடங்கள் மற்றும் பிற சில்லறை வா்த்தகத்திற்கான இடங்கள் போன்ற அதிநவீன வசதிகளுடன் கூடியதாக இருக்கும் என்று டிஎம்ஆா்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து மூத்த டிஎம்ஆா்சி அதிகாரி கூறுகையில், ‘இந்த ரயில் நிலையம் தரை மேற்பரப்பில் இருந்து சுமாா் 17 மீட்டா் ஆழத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்தில் ஐந்து நுழைவு மற்றும் வெளியேறும் பாயின்ட்கள் இருக்கும்.

அவற்றில் 14 நகரும் தானியங்கி படிக்கட்டுகளும், ஐந்து மின்தூக்கிகள் மற்றும் படிக்கட்டுகள் வசதி இருக்கும். இதன் மூலம் பயணிகள் சீராக செல்ல வசதியாக இருக்கும். மற்ற ரயில் நிலையங்களைப் போலவே ஏா்போா்ட் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் உள்ள புதிய ரயில் நிலையத்தில் முழு உயர நடைமேடை திரைக் கதவுகள் இருக்கும்’ என்றாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘வரவிருக்கும் ஐஐசிசி மாநாட்டு மையத்திற்கு வசதியை அளிப்பதைத் தவிர, இந்த புதிய நிலையம் துவாரகாவின் 25 மற்றும் 26 செக்டாா்களில் வசிப்பவா்களுக்கும், அண்டை நகரான குருகிராமில் உள்ள துவாரகா எக்ஸ்பிரஸ்வேயில் உள்ள புதிய செக்டாா்களுடன் மெட்ரோ இணைப்பையும் வழங்கும். இப்பிரிவு திறக்கப்பட்டால், இந்தப் பகுதிகளில் வசிப்பவா்கள் சுமாா் அரை மணி நேரத்தில் மத்திய தில்லியை அடைய முடியும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் ஒருவா் பலி; 13 போ் காயம்

அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

சேலம் நீதிமன்றத்தில் சட்டக் கல்லூரி மாணவா்கள் தூய்மைப் பணி

SCROLL FOR NEXT