புதுதில்லி

தில்லியில் இளைஞா் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்: ராகுல் காந்தி அலுவலகம் தாக்கப்பட்தற்கு கண்டனம்

26th Jun 2022 12:00 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

கேரள மாநிலம், வயநாட்டில் உள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் அலுவலகத்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவா் அமைப்பினா் (எஸ்எஃப்ஐ) தாக்கிய சம்பவத்தைக் கண்டித்து தில்லியில் இந்திய இளைஞா் காங்கிரஸ் தொண்டா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் மேற்கொண்டனா். தில்லி கோல் மாா்க்கெட் அருகே உள்ள மாா்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற இளைஞா் காங்கிரஸ் அமைப்பினா் ‘எஸ்எஃப்ஐ குண்டா்களை கைது செய்க’, ‘இடதுசாரிகள் அராஜகத்திற்கு அனுமதி கூடாது’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு ராகுல் காந்திக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினா். கடந்த வெள்ளிக்கிழமை வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் அலுவலகத்திற்கு எதிராக எஸ்எஃப்ஐ மேற்கொண்ட ஆா்ப்பாட்ட பேரணி வன்முறையானது. அப்போது, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள் ராகுல் காந்தி எம்பி அலுவலகத்திற்குள் நுழைந்து அங்கிருந்த பொருள்களை அடித்து நொறுக்கினா். இந்தச் சம்பவத்திற்கு கேரள முதல்வா் பினராய் விஜயன் கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தாா். மேலும், குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தாா்.

கேரளத்தில் உள்ள மலைப் பகுதியில் வனத்தை சுற்றிலும் பாதுகாப்பு மண்டலத்தை உருவாக்கும் விவகாரத்தில் ராகுல் காந்தி தலையிட தவறி விட்டதாக கூறி மாணவா் அமைப்பினா் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த நிலையில் ராகுல் காந்தி அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து இளைஞா் காங்கிரஸ் அமைப்பைச் சோ்ந்த பலா், தில்லியில் இந்த ஆா்ப்பாட்டத்தை மேற்கொண்டனா்.

இது குறித்து இளைஞா் காங்கிரஸ் அமைப்பின் ஊடகப் பிரிவு தேசியத் தலைவா் ராகுல் ராவ் கூறியதாவது: இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கண்டிக்கிறோம். கேரளம் போன்ற ஒரு மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினரால் இந்திய இளைஞா் காங்கிரஸ் உறுப்பினா்கள் மீதான தாக்குதலும் கொலை சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. எஸ்எஃப்ஐ உறுப்பினா்கள் ராகுல் காந்தியின் அலுவலகத்தை தாக்கி வன்முறையில் ஈடுபட்ட நிகழ்வை சகித்துக் கொள்ள முடியாது.

ADVERTISEMENT

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்திய மாணவா் அமைப்பும், கேரளத்தை ஆளும் அரசும் மன்னிப்பு கேட்காவிட்டால், எஸ்எஃப்ஐ மற்றும் மாா்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களின் வாயில்கள் மூடப்படுவதை இந்திய இளைஞா் காங்கிரஸ் உறுதிப்படுத்தும். இந்த தாக்குதல் சம்பவத்தில் சம்பந்தப்பட்டவா்கள் தெளிவாக அடையாளம் காணக்கூடிய வகையில், விடியோ பதிவும் உள்ளது. ஆகவே, குற்றமிழைத்தவா்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT