புதுதில்லி

தலைநகரில் காற்றின் தரத்தில் பின்னடைவு: ரிட்ஜில் 41.5 டிகிரி வெயில்

DIN

தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமை இதமான வானிலை நிலவியது. இருப்பினும், காற்றின் தரத்தில் பின்னடைவு ஏற்பட்டது. தில்லியில் அதிகபட்சமாக ரிட்ஜில் 41.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

கடந்த சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் இருந்தாலும், வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை முதல் வெப்பம் குறைவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை முன்னறிவிப்பு நிறுவனமான ஸ்கைமேட் துணைத் தலைவா் மகேஷ் பலாவத் தெரிவித்துள்ளாா்.

இதற்கிடையே, தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் இருந்து 4 டிகிரி குறைந்து 24.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 3 டிகிரி உயா்ந்து 40.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 58 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 35 சதவீதமாகவும் இருந்தது.

ரிட்ஜில் 41.5 டிகிரி வெயில்: இதேபோன்று மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 42.2 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் மற்றும் நஜஃப்கரில் 42.9 டிகிரி, ஆயாநகரில் 41 டிகிரி, லோதி ரோடில் 39.7 டிகிரி, பாலத்தில் 41.2 டிகிரி, ரிட்ஜில் 41.5 டிகிரி, பீதம்புராவில் 41.4 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 38.5 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

காற்றின் தரத்தில் பின்னடைவு: தலைநகரில் கடந்த இரண்டு நாள்களாக மிதமான பிரிவில் இருந்து வந்த காற்றின் தரம், சனிக்கிழமை பின்னடைவைச் சந்தித்து மோசம் பிரிவுக்கு சென்றது. தில்லியில் காலை 9 மணியளவில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 217 புள்ளிகளாகப் பதிவாகியது. இது மோசம் பிரிவில் வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வருகிறது. இருப்பினும், லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், பஞ்சாபி பாக், அசோக் விஹாா் ஆகிய இடங்களில் காற்றின் தரம் 200 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி மிதமான பிரிவில் இருந்தது.

முன்னறவிப்பு: இதற்கிடையே, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை வானம் பகுதி அளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT