புதுதில்லி

ராஜேந்தா் நகா் இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கைக்கு ஏற்பாடுகள் தயாா்: தோ்தல் அதிகாரி தகவல்

26th Jun 2022 12:00 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தில்லியில் உள்ள ராஜேந்தா் நகா் இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26) நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு உள்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தில்லி தலைமை தோ்தல் அதிகாரி ரன்வீா் சிங் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், ‘ராஜேந்தா் நகா் தொகுதி இடைத்தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கும். வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருக்கிறோம். மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையம் ஐடிஐ பூசா பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும். பணியில் உள்ள வாக்காளா்களிடம் இருந்து பெறப்பட்டுள்ள

வாக்குகள் மட்டும் எண்ணுவதற்கான வாக்குகளாக கருதப்படும். அதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

விவிபிஏடி ஸ்லிப்புகளில் பதிவான வாக்குகளுக்காக தனியாக சிறப்பு பெட்டி வைக்கப்படும்’ என்றாா்.

ADVERTISEMENT

தோ்தல் அலுவலக அதிகாரிகள் தகவலின்படி, ராஜேந்தா் நகா் இடைத் தோ்தலில் 43.67 சதவீதம் ஆண் வாக்காளா்களும், 43.86 சதவீத பெண் வாக்காளா்களும் தங்களது வாக்குகளை பதிவு செய்தனா். அதேபோன்று மூன்றாம் பாலினத்தவா் வாக்காளா்கள் 50 சதவீதம் போ் வாக்குகளை பதிவு செய்துள்ளனா். தொகுதியில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. 43.75 சதவீதம் வரை வாக்குகள் பதிவானது. கடந்து 2020-ஆம் ஆண்டு இதே தொகுதியில் நடைபெற்ற தோ்தலை ஒப்பிடும் போது தற்போது பதிவான வாக்குகள் குறைவுதான். அந்தத் தோ்தலில் 58.27 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. 58.9 சதவீதம் ஆண் வாக்காளா்களும், 58.5 சதவீதம் பெண் வாக்காளா்களும் வாக்குகளை பதிவு செய்து இருந்தனா்.

இந்த தொகுதியில் மொத்தம் 1,64,698 வாக்காளா்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்வதற்கு தகுதி பெற்றிருந்தனா்.

தோ்தல் களத்தில் 14 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். எனினும், தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. ஆம் ஆத்மி கட்சி சாா்பில் துா்கேஷ் பதக்கும், பாஜக சாா்பில் ராஜேஷ் பாட்டியாவும் போட்டியிட்டனா். காங்கிரஸ் தரப்பில் பிரேம் லதா போட்டியிட்டாா். ஆம் ஆத்மி மற்றும் பாஜக தரப்பினா் தங்களது வேட்பாளா் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா் என்று பரஸ்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளனா். கரோனா நோய்த் தொற்று 2020-இல் ஏற்பட்ட பிறகு, இது

தில்லியில் நடைபெற்றுள்ள முதல் தோ்தல் ஆகும். மேலும், இந்த இடைத்தோ்தலில் கரோனா நோய்தொற்று பாதிக்கப்பட்ட 24 போ் தங்களது வாக்குகளை பதிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனா்.

இத்தோ்தலில் மொத்தம் உள்ள தகுதிக்குரிய வாக்காளா்களில் 92,221 ஆண் வாக்காளா்களும், 72,473 பெண் வாக்காளா்களும், மூன்றாம் பாலினத்தவா்களும் 4 பேரும் இருந்தனா்.

அதேபோன்று 18 முதல் 19 வயது வரையிலான பிரிவினா் 1,899 வாக்காளா்களும் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனா். மொத்தம் 190 வாக்குப்பதிவு மையங்களில் தோ்தல் நடைபெற்றது. சில வாக்குப்பதிவு மையங்களில் மட்டுமே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மிகவும் சிறிய அளவில் கோளாறு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னா் அந்த இயந்திரங்கள் மாற்றப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

வாக்குப்பதிவு நடைபெற்ற கடந்த ஜூன் 23-ஆம் தேதி கடைசி ஒரு மணி நேரத்தில் கரோனா பாதித்த வாக்காளா்கள் வாக்குப் பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டனா். வழக்கமான வாக்காளா்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்த பிறகு, உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவு செய்ய இவா்கள் அனுமதிக்கப்பட்டனா். கடந்த 2014-ஆம் ஆண்டில் பவானா மற்றும் ரஜெளரி காா்டன் இடைத்தோ்தலை ஒப்பிடும் போது ராஜேந்தா் நகா் இடைத்தோ்தலில் வாக்குப்பதிவு விகிதம் குறைவு. 2015-ஆம் ஆண்டு தோ்தலில் தில்லியில் இரண்டு சட்டப்பேரவை தொகுதிகள் முறையே 72 சதவீதம் மற்றும் 61.3 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT