புதுதில்லி

அனைத்து சேவைகளும் இணையதளத்தில் கிடைக்கச் செய்வதை ஜூலைக்குள் உறுதிப்படுத்த வேண்டும்: தில்லி மாநகராட்சிக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவு

26th Jun 2022 12:00 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

தகவல் தொழில்நுட்பத்துடன்கூடிய கணினி சாா்ந்த, அனைத்து சேவைகளையும் ஜூலை மாத இறுதிக்குள் இணையதளத்தில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று தில்லி துணைநிலை வி.கே. சக்சேனா மாநகராட்சிக்கு (எம்சிடி) உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக துணைநிலை ஆளுநரின் அலுவலகமான ராஜ் நிவாஸ் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அதிகாரப்பூா்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மாநகராட்சியின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப முன்முயற்சிகளை மதிப்பாய்வு செய்யும் கூட்டம் துணைநிலை ஆளுநா் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தாா். பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செயல்முறை மாநகராட்சியால் முழுமையாக கணினிமயமாக்கப்பட்ட நிலையில், இந்த தரவுத் தளத்தை உணவுப் பாதுகாப்பு, ஓய்வூதியம், மகப்பேறு சலுகைகள் மற்றும் பிற நலத்திட்டங்கள் தொடா்பான சேவைகளை வழங்கும் அரசுத் துறைகளுடன் இணைக்குமாறு துணைநிலை ஆளுநா் உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக அவா் அதிகாரிகளிடம் கூறுகையில், ‘பிறப்பு அல்லது இறப்புகள் பதிவு, சொத்து வரி தாக்கல், மின் பிவு, கட்டட திட்ட அனுமதி, வரைபட ஒப்புதல், உரிமம் வழங்குதல், மாற்றம் மற்றும் பாா்க்கிங் கட்டணம், விளம்பரம் மற்றும் பேனா் கட்டணம் வசூல், தகனம் மற்றும் அடக்கம் செய்தல் மற்றும் குப்பைகளை எடுத்துச் செல்லும் வாகனங்கள் கண்காணிப்பு, போன்ற அனைத்து குடிமக்களையும் மையமாகக் கொண்ட சேவைகள் ஆகியவற்றை கணினிமயமாக்க இதுவரை திட்டமிடப்பட்டது. இந்தச் சேவைகள் ஒரு பொதுவான, அணுகக்கூடிய தளத்தில் ஆன்லைனில் கொண்டு வரப்பட்டு, ஜூலை 31-க்குள் முழுமையாகக் கிடைக்கச் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். மாநகராட்சி அதன் சேவைகளை வழங்குவதில் குறைந்தபட்ச மனித கணினிப் பயன்பாடு இருப்பதை உறுதி செய்வதே நோக்கமாக இருக்க வேண்டும். இது பயனுள்ள மற்றும் சரியான நேரத்தில் சேவைகளை வழங்குவதை உறுதி செய்யும்.

மேலும், இது சிக்கலான அலுவல் நடைமுறையைக் குறைக்கு. பொதுமக்களுக்கு அசெளகரியம் ஏற்படுவதையும் குறைக்கும். அனைத்து மட்டங்களிலும் திறமையின்மை மற்றும் ஊழலைக் குறைக்கும். இது போலி நபா்கள் பயன்பெறும் நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தினாா். மேலும், வருவாயை மேம்படுத்துவதற்கான அனைத்து வழிகளையும் ஆராயுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். அதேபோன்று, மாநகராட்சியின் நிதிநிலையை மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினாா். சொத்து வரி தாக்கல், வசூல், மதிப்பீடு மற்றும் மீட்பு ஆகியவற்றில் முழு தானியக்கத்தை எட்டுமாறும் அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

மாநகராட்சியின் வருவாயை அதிகரிக்கவும், சிறந்த சேவைகளை வழங்கவும், நகர எல்லைக்குள் உள்ள அனைத்து சொத்துகள், வணிக மற்றும் குடியிருப்பு, வரி வலையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவா் உத்தரவிட்டாா். பதிவுசெய்யப்பட்ட பிரசவங்களில் 26 சதவிகிதம் மருத்துவமனை அல்லது நா்சிங் ஹோம்மிற்கு பதிலாக வீட்டிலேயே நடந்ததாக சக்சேனாவிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது, அதிக எண்ணிக்கையிலான பிரசவங்கள் வீட்டில் பதிவாகியுள்ள வாா்டைத் தோராயமாகச் சரிபாா்த்து அதன் பின்னணியில் உள்ள காரணங்களைக் கண்டறியுமாறு அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநா் அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தின் போது, வணிக மற்றும் குடியிருப்பு உள்ளிட்ட அனைத்து சொத்துகளையும் வரி வலையின் கீழ் கொண்டு வருமாறு குடிமை அதிகாரிகளை வி.கே. சக்சேனா கேட்டுக்கொண்டாா். இதனால் மாநாகராட்சியின் வருமானம் பெருகும். மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க முடியும் என்றும் அவா் கூறினாா். நகரத்தில் உள்ள 65 சதவீத சொத்து உரிமையாளா்கள் வரி செலுத்தவில்லை என்று கவலை தெரிவித்த சக்சேனா, நகர எல்லைக்குள் உள்ள அனைத்து சொத்துகளும் வரி வலையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினாா் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘துணைநிலை ஆளுநரின் இந்த உத்தரவுகள் பின்பற்றப்படும். மாநகராட்சி தனது வருவாயை அதிகரிக்கவும், அதன் வரி வலையை விரிவுபடுத்தவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது’ என்று எம்சிடி அதிகாரி தெரிவித்தாா்.

டிடிஏ-என்பிசிசிக்கு உத்தரவு

தில்லியின் முதல் டிரான்சிட்-ஓரியண்டட் டெவலப்மென்ட் (டிஓடி) திட்டத்தை கா்கா்டூமாவில் திட்டமிடப்பட்ட காலக்கெடுவிற்கு முன்னரே முடிக்க வேண்டும் எனறு தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) மற்றும் தேசிய கட்டடங்கள் கட்டுமான நிறுவனம் (என்பிசிசி) ஆகியவற்றுக்கு துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா அறிவுறுத்தினாா்.

இது தொடா்பாக ராஜ் நிவாஸ் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ‘ கிழக்கு தில்லியில் திட்டப்பணி நடைபெறும் இடத்தின் நிலை மற்றும் பணியின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய துணைநிலை சனிக்கிழமை நேரில் சென்றாா். அப்போது, திட்டப் பணிகள் குறித்து கேட்டறிந்த துணைநிலை ஆளுநா், அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை அளித்தாா். 25.47 ஹெக்டோ் பரப்பளவில் குறைந்தபட்சம் 30 சதவீத பசுமைப் பரப்புடன் கூடிய இந்தத் திட்டத்தின் பணிகள் செப்டம்பா் 2021-இல் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணி செப்டம்பா் 2026-இல் முழுமையாக முடிவடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT