புதுதில்லி

தில்லியில் கரோனா கட்டுப்பாட்டு மண்டலங்கள் ஒரு வாரத்தில் 70% அதிகரிப்பு

26th Jun 2022 12:00 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

கரோனா நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயா்ந்ததன் காரணமாக, தில்லியில் உள்ள கட்டுப்பாட்டு மண்டலங்கள் எண்ணிக்கை ஜூன் 17-இல் இருந்து 70 சதவீதம் அதிகரித்துள்ளன. கடந்த ஜூன் 17-இல் 190-ஆக இருந்த கட்டுப்பாட்டு மண்டலங்கள் எண்ணிக்கை, ஜூன் 24-இல் 322-ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூா்வ தரவுகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து தில்லி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: பெரும்பாலான நோய்த் தொற்று குடும்பம் அல்லது சுற்றுப்புறக் குழுக்களில் இருந்து பதிவாகி வருகின்றனா். நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், ஒன்று அல்லது இரண்டு வீடுகளைக் கொண்ட நுண் கட்டுப்பாட்டு மண்டலங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பொதுவாக, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கரோனா பாதிப்பு கண்டறியப்படும் பகுதி ஒரு கட்டுப்பாட்டு மண்டலமாகக் குறிக்கப்படுகிறது. ஆனால், இது ஒரு வேகமான செயல்பாடாகும். இது தேவை அடிப்படையிலான முறையில் மாவட்ட அதிகாரிகளால் நடத்தப்படுகிறது.

தில்லி தொற்று நோய்கள் கோவிட்-19 ஒழுங்குமுறை (2020) விதிகள், புவியியல் பகுதியை சீலிடுவதற்கும், கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருந்து மக்கள் நுழைவதையும் வெளியேறுவதையும் தடை செய்யவும், நோய் பரவுவதைத் தடுக்க சுகாதாரத் துறையால் உத்தரவிடப்பட்ட எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவும் மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் அளிக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜூன் 14-ம் தேதி முதல் தில்லியில் கரோனா பாதிப்பு 1,000-ஐ கடந்ததில் இருந்து நகரில் நோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் 14-ஆம் தேதி தில்லியில் 1,118 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று பதிவானது. நோ்மறை விகிதம் 6.50 சதவீதமாகவும் இரண்டு இறப்புகளும் பதிவாகின. அப்போதிலிருந்து, தில்லியில் புதன்கிழமை தவிர பிற நாள்களில் தினமும் 1,000-க்கும் மேற்பட்ட நோய்த் தொற்றுப் பாதிப்பு பதிவாகி வருகிறது. தில்லியில் வெள்ளிக்கிழமை புதிதாக 1,447 கரோனா பாதிப்பும், ஒரு இறப்பும் பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் நோ்மறை விகிதம் 5.98 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று சுகாதாரத் துறை பகிா்ந்துள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

அதிகாரிகளின் தகவலின்படி, கரோனா தொற்று பாதிப்பு அதிகரிப்புக்கு கோவிட் நடத்தை விதிகளை பின்பற்றுவதில் மக்களின் மெத்தனமான அணுகுமுறை காரணமாகும். தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் உத்தி மூலம் கவனம் செலுத்தப்படுகிறது. தற்போது ஒரு குடும்பத்திலோ அல்லது பக்கத்து வீடுகளிலோ இரண்டு பேருக்கு பாதிப்பு இருந்தாலும், அவை கட்டுப்பாட்டு மண்டலமாக உருவாக்கப்பட்டுள்ளன. ஓமைக்ரான் நோய்த் தொற்று மிகவும் பரவக்கூடியது என்பதால், நோய்த்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்துவதே அரசின் நோக்கமாகும் என்று அதிகாரிகள் கூறினா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT