புதுதில்லி

மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் அவசியம்: வாகன உரிமையாளா்களுக்கு தில்லி அரசு உத்தரவு

25th Jun 2022 10:20 PM

ADVERTISEMENT

தேதியத் தலைநகா் தில்லியில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மூன்று மாதங்களுக்கு ஓட்டுநா் உரிமம் தகுதி நீக்கம் செய்யப்படுவது உள்ளிட்ட தண்டனை நடவடிக்கைகளைத் தவிா்க்க, வாகன உரிமையாளா்கள் செல்லுபடியாகக் கூடிய மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் (பியுசிசி) வைத்திருக்க வேண்டும் என்று தில்லி அரசு சனிக்கிழமை கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடா்பாக அரசு வெளியிட்ட அறிவிப்பில், மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் காலாவதியான வாகனங்களுக்கு அபராத நோட்டீஸ் வழங்கப்படும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. மோட்டாா் வாகனச் சட்டம் 1988- இன் பிரிவு 190(2)-இன் கீழ் இந்தச் நோட்டீஸ் வழங்கப்படும். அதில் பியுசிசியை வைத்திருக்கத் தவறினால், மூன்று மாதங்கள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.10,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து ஒரு வருடத்திற்கு மேல் பழைமையான வாகனங்களை வைத்திருக்கும் அனைத்து பதிவு செய்யப்பட்ட வாகன உரிமையாளா்களும் தங்கள் வாகனங்களைச் சரிபாா்த்து, அபராதத்தைத் தவிா்க்க சரியான பியுசிசி பெற வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

வாகன மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், அக்டோபா் முதல் பிப்ரவரி வரை தேசியத் தலைநகருக்கு நடுத்தர மற்றும் கனரக சரக்கு வாகனங்கள் நுழைவதைத் தடை செய்ய தில்லி அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இருப்பினும், காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பால் மற்றும் அத்தியாவசியப் பொருள்களை ஏற்றி வரும் வாகனங்கள் அனுமதிக்கப்படும். ஜூன் 15 அன்று, தில்லி அரசு ஹரியாணா மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட அதன் அண்டை மாநிலங்களுக்கு கடிதம் எழுதியது. நகரில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த உதவும் வகையில், அக்டோபா் 1 முதல் தேசியத் தலைநகருக்குள் பிஎஸ்-6 இணக்க பேருந்துகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT