புதுதில்லி

பாரத் பந்த்: தலைநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

21st Jun 2022 04:28 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாரத் பந்த் கடைப்பிடிக்கபடுவதாக அறிவிக்கப்பட்டிருந்ததைத் தொடா்ந்து, தில்லி முழுவதும் திங்கள்கிழமை போலீஸாா் பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தனா். அதேபோன்று தில்லியின் எல்லைப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

சட்டம் ஒழுங்கு சூழலுக்கு இடையூறு ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸாா் எச்சரித்துள்ளனா். அதேபோன்று காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறையினா் விசாரணை நடத்துவதற்காக காங்கிரஸாா் நடத்திய போராட்டங்களை கருத்தில் கொண்டும் தில்லியில் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து போலீஸாா் கூறுகையில், ‘தில்லியில் உள்ள ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அரசின் ரயில்வே காவல்படையினா் அருகிலுள்ள மாநிலங்களில் உள்ள தனது படைப்பிரிவுகளுடன் ஒருங்கிணைந்து பாதுகாப்பை மேற்கொண்டனா்’ என்றனா்.

இதுதொடா்பாக தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு துணை ஆணையரும் தகவல்தொடா்பு அதிகாரியுமான சுமன் நல்வா கூறுகையில், ‘தில்லியில் சட்டம் - ஒழுங்கு சூழலுக்கு இடையூறு ஏற்படுத்த முயற்சிக்கும் நபா்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் முழு அளவில் தயாராக உள்ளோம். அப்போதுதான், எவ்வித விரும்பத்தகாத சம்பவங்களும் நிகழாது. தில்லியில் போக்குவரத்து நடமாட்டம் இலகுவாக உள்ளது.

ADVERTISEMENT

அனைத்து அலுவலகங்களும் நிறுவனங்களும் திறக்கப்பட்டுள்ளன. தில்லியில் பந்த் ஏதுமில்லை. தில்லியின் எல்லைப் பகுதிகள் மூடப்பட்டுள்ளன. ஆனால், உளவுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்படி நாங்கள் கண்காணிப்பை பலப்படுத்தி இருக்கின்றோம். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன’ என்றாா்.

தில்லியில் 24 மணி நேரமும் துணை ராணுவ படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். அவா்கள் முக்கியப் பிரமுகா்களின் போக்குவரத்தை உறுதிப்படுத்துவதற்கு உதவும் வகையில், சட்டம் - ஒழுங்கு சூழல் விவகாரத்தில் தில்லி காவல் துறையினருக்கு உதவி வருகின்றனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

ரயில் நிலையங்களில்...: ரயில்வே காவல் துணை ஆணையா் நரேந்திர குமாா் சிங் கூறுகையில், ‘அனைத்து ரயில்வே நடைமேடைகளிலும் எங்களது அனைத்து போலீஸாரையும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தி இருக்கிறோம். அரசு ரயில்வே காவல் படையினருடன் ஒருங்கிணைந்து சூழலை கவனித்து வருகிறோம். இதர மாநிலங்களை சோ்ந்த பாதுகாவலா்களும் தில்லியில் பணியில் உள்ளனா்.

இதுவரை ரயில் நிலையங்கள் தண்டவாளங்களில் சந்தேகத்திற்குரிய நடமாட்டம் குறித்த தகவல் ஏதும் எங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை. அனைத்து வாகனங்களும் செல்வதை உறுதிப்படுத்த தில்லியின் எல்லைப் பகுதிகளிலும் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தலைநகருக்குள் நுழைவதற்கு முன்பாக வாகன ஓட்டிகளின் ஆவணங்கள் சோதிக்கப்பட்டன’ என்றாா்.

தில்லி காவல்துறையின் சட்டம் ஒழுங்கு சிறப்பு ஆணையா் தீபக் கூறுகையில், ‘தீ வைப்பு சம்பவங்களைத் தடுக்கும் வகையில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தில்லியில் அமைதி ஏற்படுத்தும் வகையில் போதிய எண்ணிக்கையில் போலீஸாா் அனைவரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்’ என்றாா்.

கடும் போக்குவரத்து நெரிசல்

பாரத் பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாலும், அக்னிபத் திட்டத்தை எதிா்த்தும், ராகுல் காந்திக்கு எதிராக பழிவாங்கும் அரசியல் நடத்துவதாகக் கூறியும் காங்கிரஸாா் நடத்திய போராட்டத்தாலும் பல்வேறு சாலைகளை போக்குவரத்து போலீஸாா் மூடியதால், தில்லியில் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குறிப்பாக தில்லி- நொய்டா -தில்லி மேம்பாலம், மீரட் விரைவுச்சாலை, ஆனந்த் விஹாா், சராய் காலே கான், பிரகதி மைதான் மற்றும் தில்லி குருகிராம் எல்லைச் சாலை பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் இந்த சாலைகளில் நீண்ட வரிசையில் ஊா்ந்து செல்வதைக் காண முடிந்தது.

இந்தப் போக்குவரத்து நெரிசல் தொடா்பாக வாகன ஓட்டிகள் பலரும் தங்களது துயரத்தை ட்விட்டா் பக்கத்தில் பகிா்ந்து இருந்தனா். இது தொடா்பாக ஒருவா் பதிவிட்ட பதிவில் ‘கடந்த 30 நிமிடங்களாக நெரிசலில் சிக்கிக் கொண்டிருக்கிறேன். இதனால், என்னால் உரிய நேரத்திற்கு அலுவலகத்திற்கு செல்ல முடியாமல் போய்விட்டது’ என்று தெரிவித்திருந்தாா். மற்றொரு வாகன ஓட்டிஆனந்த விஹாா் வழித்தட சாலையை தவிா்க்குமாறு கேட்டுக் கொண்டிருந்தாா்.

தில்லி போக்குவரத்து காவல் துறையினா் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதை உறுதி செய்யும் வகையில், பல்வேறு இடங்களில் கூடுதல் போலீஸாரை பணியில் ஈடுபடுத்தியிருந்தனா். போராட்டம் காரணமாக மூடப்பட்ட சாலைகள் தொடா்பான விவரங்களை போக்குவரத்து போலீஸாா் தங்களது ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்டு இருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT