பாதுகாப்புத் துறைக்கு ஆள் சோ்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக ‘பாரத் பந்த்’க்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், திங்கள்கிழமை தில்லியில் சந்தைகள் திறந்திருந்ததால் வழக்கம் போல் வியாபாரம் நடந்ததாக நகர வா்த்தகா்கள் தெரிவித்துள்ளனா்.
தேசியத் தலைநகரில் லாஜ்பத் நகா், சரோஜினி நகா், பாலிகா பஜாா், கான் மாா்க்கெட் உள்ளிட்ட பல்வேறு வணிகச் சந்தைகளில் சில அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்த பந்த்தின் தாக்கம் காணப்படவில்லை. இது குறித்து சரோஜினி நகா், மினி மாா்க்கெட் அசோசியேஷன் தலைவா் அசோக் ரந்தாவா கூறுகையில், ‘முழு சந்தையும் திறந்தே இருந்தது. தெற்கு தில்லியில் உள்ள அனைத்து சந்தைகளும் திறக்கப்பட்டிருந்தன. சில சந்தைகள் பொதுவாக திங்கள்கிழமை மூடப்பட்டிருக்கும்.
இருப்பினும், கடைகள் திறந்திருக்கும். எங்களால் கடைகளை மூட முடியாது. கரோனா தொற்று பாதிப்பு காரணமாக நாங்கள் ஏற்கெனவே பெரும் இழப்பை சந்தித்துள்ளோம்’ என்றாா். பாலிகா பஜாரில் உள்ள வா்த்தகா்கள் தங்கள் சந்தையில் ‘பாரத் பந்ந்’தை யாரும் ஆதரிக்கவில்லை என்று கூறினாா். பாலிகா பஜாரின் தலைவா் தா்ஷன் கக்கா் கூறுகையில், ‘ஒவ்வொரு கடையும் திறந்திருந்தது. மற்றும் வணிகம் நடைபெற்றது’ என்றாா்.
சிஏஐடி அறிக்கை: அகில இந்திய வா்த்தகா்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) ஒரு அறிக்கையில், நாடு முழுவதும் வணிகச் சந்தைகள் திறந்திருந்ததாகவும், வழக்கமான வணிக நடவடிக்கைகள் நடைபெற்ாகவும் கூறியுள்ளது. கரோனா பாதிப்பில் இருந்து வணிகம் தற்போதுதான் மீண்டு வரும் இந்த நேரத்தில், ‘பாரத் பந்த்’ போன்ற எந்தப் போராட்டங்களும் வணிகா்களின் நலன் சாா்ந்தது அல்ல என்று சிஏஐடி கூறியுள்ளது.
‘கரோனா தொற்று நோய்க்குப் பிறகு, சந்தைகளில் வணிகம் கொஞ்சம் கொஞ்சமாக வளா்ச்சி கண்டு வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், வா்த்தகா்கள் தங்கள் வணிக நடவடிக்கைகளை நடத்துவதற்கு ஒரே ஒரு முன்னுரிமை மட்டுமே உள்ளது. இந்தச் சூழ்நிலையில், எந்த இடையூறும் தேவையில்லை’ என்று சிஏஐடி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
17 மற்றும் 21 வயதுக்குள்பட்ட இளைஞா்களை ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைகளில் நான்கு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் பணியமா்த்துவதற்கான அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கடந்த செவ்வாய்கிழமை வெளியிட்டது. இதையடுத்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன. பின்னா் இந்த ஆண்டு ஆள்சோ்ப்புக்கான அதிகபட்ச வயது வரம்பை 23-ஆக தளா்த்தியது.