புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை வெயிலின் தாக்கம் ஓரளவு குறைந்திருந்திருந்தது. இந்த நிலையில், இன்னும் இரண்டு நாள்களில் வெயிலில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரத்தில் பல்வேறு இடங்களில் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் இருந்தது.
திங்கள்கிழமை அன்று தில்லி நகரம் கடுமையான வெப்ப அலையின் பிடியில் இருந்தது. நகரத்தில் உள்ள பல வானிலை நிலையங்களில் அதிகபட்ச வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கு மேல் நிலைத்தது. இருப்பினும், இன்னும் இரண்டு நாள்களில் வெயிலில் இருந்து ஓரளவு நிவாரணம் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஜூன் 16- ஆம் தேதிக்குள் பருவமழைக்கு முந்தைய செயல்பாடு அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், அடுத்த இரண்டு அல்லது மூன்று நாள்களில் அதிகபட்ச வெப்பநிலை ஏழு முதல் எட்டு டிகிரி வரை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது
வெப்பநிலை குறைவு: தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கி வரும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியை விட 3 டிகிரி உயா்ந்து 31.20 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 39.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 40 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 42 சதவீதமாகவும் இருந்தது. தில்லியில் திங்கள்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 31.60 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 43.7 டிகிரி செல்சிஸாகவும் பதிவாகியிருந்தது.
பீதம்புராவில் 41.3 டிகிரி: இதே போன்று தில்லியிலுள்ள மற்ற வானிலை நிலையங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறைந்து பதிவாகியது. இதன்படி, ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 38.7 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 39.5 டிகிரி, நஜஃப்கரில் 40.7 டிகிரி, ஆயாநகரில் 38.6 டிகிரி, லோதி ரோடில் 40.4 டிகிரி, பாலத்தில் 39.4 டிகிரி, ரிட்ஜில் 40.2 டிகிரி, பீதம்புராவில் 41.3 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 38.7 டிகிரி செல்சியஸ் என பதிவாகியது.
காற்றின் தரம்: தில்லியில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் இருந்தது. நகரத்தில் காலை 9.30 மணியளவில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு 203 புள்ளிகளாகப் பதிவாகி மோசம் பிரிவில் இருந்தது என்று மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், ராமகிருஷ்ணாபுரம், அரபிந்தோ மாா்க், ஷாதிப்பூா் ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு 170 முதல் 194 புள்ளிகள் வரை பதிவாகி மிதமான பிரிவில் நீடித்தது.
மழைக்கு வாய்ப்பு: இதற்கிடையே, தில்லியில் புதன்கிழமை (ஜூன் 15) அன்று இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணித்துள்ளது.