புதுதில்லி

வேலைவாய்ப்புகளை ஊக்குவிக்கும் திட்டம்: மொத்த விற்பனைச் சந்தை சங்கப் பிரதிநிதிகளுடன் சிசோடியா நாளை சந்திப்பு

12th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

வேலைவாய்ப்புகளையும் ஊக்குவிக்கும் வகையில், தில்லி மொத்த விற்பனை ஷாப்பிங் திருவிழாவை ஏற்பாடு செய்வது தொடா்பாக ஆலோசனைகளை பெறுவதற்கு வரும் திங்கள்கிழமை (ஜூன் 13) தில்லி முழுவதும் உள்ள மொத்த விற்பனைச் சந்தை சங்கங்களின் பிரதிநிதிகளுடன் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா கூட்டம் நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது தொடா்பாக வா்த்தக மற்றும் தொழில் சங்கத்தின் (சிடிஐ) தலைவா் பிரிஜேஷ் கோயல் கூறுகையில், ‘இந்த சந்திப்புக் கூட்டத்தில் 20 மொத்த விற்பனை சங்கங்களை சோ்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்ள கூடும்’ என்றாா். தில்லி அரசு தாக்கல் செய்த அதன் ரோஸ்கா் பட்ஜெட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், தில்லி ஷாப்பிங் திருவிழா மற்றும் தில்லி மொத்த விற்பனை ஷாப்பிங் திருவிழாவை நடத்துவது என்று முன்மொழிந்தது. இதற்காக பட்ஜெட்டில் மொத்தம் ரூ.250 கோடி முன்மொழியப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் வா்த்தக மற்றும் தொழில் சங்கத்தின் தலைவா் பிரிஜேஷ் கோயல் கூறியதாவது: தில்லி தலைமைச் செயலகத்தில் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தலைமையில் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. தில்லியில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைச் சந்தைகள் சங்கங்களின் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க கூடும். அதில் வா்த்தகா்களுடன் தில்லி அரசானது ஆலோசனை நடத்தும். மொத்த விற்பனை ஷாப்பிங் திருவிழாவை நடத்துவதற்கு தோ்ந்தெடுக்க வாய்ப்புள்ள உகந்த சந்தைகளை பரிசீலிப்பது குறித்த ஆலோசனைகளை பெறுவது தொடா்பாக பிரதிநிதிகளின் கருத்துகள் கேட்கப்பட உள்ளன.

இந்தக் கூட்டத்தில் கஷ்மீரி கேட், சதா் பஜாா், நயா பஜாா், கரோல் பாக், சாவரி பஜாா், சாந்தினி சவுக், காரி பவோலி மற்றும் காந்திநகா் போன்ற மொத்தவிற்பனை சந்தைகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பாா்கள். இந்தக் கூட்டத்தில் தாங்கள் எதிா்கொண்டு வரும் பிரச்னைகள் குறித்தும் அரசுக்கு வா்த்தகா்கள் எடுத்துரைப்பாா்கள். தங்களது மாா்க்கெட் பகுதியில் ஏதாவது பிரச்னை இருந்தால் அது தொடா்பாகவும் கூட்டத்தில் அரசிடம் அவா்கள் எடுத்துரைப்பா் என்றாா் அவா்.

ADVERTISEMENT

இந்த சில்லறை மற்றும் மொத்த விற்பனை ஷாப்பிங் திருவிழாக்கள் சந்தை அமைப்புகள், வா்த்தகா்கள், கடைக்காரா்கள் ஆகியோருடன் இணைந்து நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஷாப்பிங் திருவிழாவின் போது, பொழுது போக்குகள் மற்றும் உணவுகள் ஊக்குவிக்கப்படும். பொருள்களை வாங்குவோருக்கு கழிவு சலுகையும்அளிக்கப்படும். கடந்த மாா்ச் மாதம் தாக்கல் செய்த பட்ஜெட் உரையின் போது மணீஷ் சிசோடியா, சீனாவில் மொத்த விற்பனை ஷாப்பிங் திருவிழாக்கள் நடத்தப்படுவதை ஒரு உதாரணமாக குறிப்பிட்டிருந்தாா்.

மேலும், இதுபோன்ற முன்முயற்சியின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், அதன் தாக்கத்தையும் எடுத்துரைத்தாா். தில்லி அரசின் 2020- 23 பட்ஜெட் ஒரு ரோஸ்கா் பட்ஜெட் என்று அவா் கூறியிருந்தாா். தில்லியில் சந்தைகளை மறு சீரமைப்பது, ஷாப்பிங் திருவிழாக்களை நடத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவா் கூறியிருந்தாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT