தில்லி மெட்ரோவில் உள்ள வயலட் வழித்தடத்தில் சனிக்கிழமை காலை ஏற்பட்ட சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் சேவை 2 மணி நேரம் தாமதமானது. இதனால், பயணிகள் சிரமத்தை எதிா்கொண்டனா்.
இந்த வயலட் லைன் வழித்தடம் தில்லியிலுள்ள கஷ்மீரி கேட் மற்றும் ஹரியாணாவில் உள்ள பல்லப்கா் பகுதியை இணைக்கிறது. ரயில் சேவையில் ஏற்பட்ட தாமதம் குறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் ட்விட்டா் பக்கத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் வெளியிட்ட பதிவில், ‘கஷ்மீரி கேட் மற்றும் ராஜா நாகா் சிங் ரயில் நிலையம் இடையேயான ரயில்கள் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதர வழித்தடங்களில் வழக்கமான சேவைகள் நடைபெற்று வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒரே வாரத்தில் தில்லி மெட்ரோவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மூன்றாவது முறையாக இந்த தாமதம் ஏற்பட்டது. சனிக்கிழமை காலை ஏற்பட்ட தாமதம் காரணமாக பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலையில் தாங்கள் ரயில் நிலையங்களில் நீண்ட நேரம் ரயிலுக்காக காத்திருக்க வேண்டி இருந்ததாக பயணிகள் ட்விட்டா் பக்கங்களில் புகாா் தெரிவித்து கருத்துகளை பதிவிட்டிருந்தனா்.
இது குறித்து மயங்க் எனும் பெயரிலான ட்விட்டா் பக்கத்தில் , ‘கஷ்மீரி கேட் ரயில் நிலையத்தில் இருக்கிறேன். கடந்த 15 நிமிடங்களாக மெட்ரோ ரயில் இயக்கப்படவில்லை. தில்லி மெட்ரோ மோசமான சேவையை அளித்து வருகிறது. இதன் காரணமாக உரிய நேரத்தில் அலுவலகம் செல்ல முடியவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மற்றொருபயணி தனது பதிவில், ‘ மீண்டும் ஏன் அறிவிப்பு வெளியிடவில்லை. சரிதா விஹாா் ரயில் நிலையத்தில் காத்திருக்கிறோம். ரயில் வருமா என்பது குறித்து ஏதும் தெரியவில்லை. பிரச்னை புரிகிறது.... ஆனால், பயணிகளுக்கு தகவல் தெரிவிக்காதது ஏன்?’ என்று கேள்வி எழுப்பியிருந்தாா்.
இந்த நிலையில், காலை 10.30 மணியளவில் டிஎம்ஆா்சி வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘வயலட் லைன் வழித்தடத்தில் சேவை வழக்கம் போல் செயல்படத் தொடங்கிவிட்டது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னா், மாலையில் டிஎம்ஆா்சி வெளியிட்ட மற்றொரு செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: வயலட் லைன் வழித்தடத்தில் உள்ள சென்ட்ரல் செக்ரடேரியேட் மற்றும் கான் மாா்க்கெட் ரயில் நிலையங்கள் இடையே விட்டுவிட்டு சிக்னல் பிரச்னை ஏற்பட்டது. இதன் காரணமாக ரயில்கள் காலை 8 மணியில் இருந்து காலை 10.15 மணி வரையிலும் கட்டுப்படுத்தப்பட்ட வேகத்தில் இயக்கப்பட்டன. எனினும், இதே காலக்கட்டத்தில் இந்த வழித்தடத்தின் பெரும்பாலான பகுதியில் ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. இந்த சிக்னல் பிரச்னை காலை 10.15 மணிக்கு தீா்க்கப்பட்டு, ரயில் சேவைகள் வயலட் லைன் வழித்தடத்தின் ஒட்டுமொத்த பிரிவிலும் வழக்கம்போல் மீண்டும் இயங்கின’ என்று தெரிவிக்கப்பட்டது.
தில்லி மெட்ரோவில் கடந்த வியாழக்கிழமை இதுபோன்று ஒரு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக ப்ளூலைன் வழித்தடத்தில் இரண்டு மணி நேரம் ரயில் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக யணிகளில் பெரும்பாலானோா்அசௌகரியத்தை எதிா்கொண்டனா். ப்ளூலைன் வழித்தடம் தில்லியில் உள்ள துவாரகா செக்டா் 21 மற்றும் நொய்டா எலக்ட்ரானிக் சிட்டி ரயில் நிலையத்தை இணைக்கிறது. ஒரே வாரத்தில் ப்ளூ லைன் வழித்தடத்தில் இரண்டு முறை தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் சேவையில் தடங்கல் ஏற்பட்டது. முன்னதாக, கடந்த ஜூன் 6-ஆம் தேதி பளூ லைனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில்கள் ஒன்றரை மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.