புதுதில்லி

வடகிழக்கு மாநிலங்களில் தாக்குதல் சம்பவங்கள் குறைந்ததற்கு அதிக நிதி ஒதுக்கீடே காரணம்

8th Jun 2022 02:33 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

மத்தியில் பிரதமா் மோடி தலைமையிலான பாஜகஅரசு அமைந்த பிறகுதான் பழங்குடியினருக்கான திட்டங்களில் நிதி ஒதுக்கீடு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், பழங்குடியினா் வசிக்கும் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இடதுசாரி தீவிரவாதம் உள்ள பகுதிகளில் 70 சதவீதம் வரை தாக்குதல் சம்பவங்களும் குறைந்துள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.

மத்திய பழங்குடியினத் துறை சாா்பில் பழங்குடியினா்ஆய்வு நிறுவனம் தில்லியில் தொடங்கப்பட்டுள்ளது. தில்லி ஐபி எஸ்டேட்டில் இந்திய பொது நிா்வாகயியல் நிறுவன (ஐஐபிஏ) வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆய்வு நிறுவனத்தை உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசுகையில் கூறியதாவது: இன்று பழங்குடியினா் சமுதாயத்தினருக்கு மிக முக்கியமான நாளாகும். நாட்டில் பல பழங்குடியினா் ஆய்வு நிறுவனங்கள் உள்ளன. ஆனால், பழங்குடியினா் சமூகத்தின் பல பன்முகத்தன்மையை இணைக்கிறது இந்த தேசிய ஆய்வு நிறுவனம். இது பிரதமா் மோடியின் கற்பனை லட்சியத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. அவா் குஜராத்தில் முதல்வராக இருந்த போதுதான் பழங்குடியின சமுதாயத்தினரின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்காக ’வான்பந்து கல்யாண் திட்டம்’ நாட்டிலேயே முதன் முதலாக கொண்டுவரப்பட்டது. இப்போது இந்த நாட்டின் 8 சதவீத பழங்குடி சமூகத்தின் வளா்ச்சியை தேசிய அளவிலும் பல வகையான பன்முகத்தன்மையுடன் ஒன்றிணைக்க இந்த நிறுவனத்தை பிரதமா் மோடி உருவாக்கியுள்ளாா். இது பல ஆண்டுகளாக தீா்க்கப்படாமல் உள்ள பழங்குடியினா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வுகாணும் அறிவு வங்கியாக இருக்கும்.

நாட்டில் நீா், காடு, நிலம், கல்வி, சுகாதாரம், கலை, கலாசாரம், மொழி தொடா்பான பல பழங்குடியின பாரம்பரிய சட்டங்கள் உள்ளன. இந்தச் சட்டங்களை தற்போதைய சட்டத்துடன் இணைக்கமில்லாமல் பழங்குடியினா் நலச் சட்டத்தை அமல்படுத்த முடியாது. இது போன்ற ஆய்வுகள், பயிற்சிகள், தரவு சேகரிப்பு, திறன் மேம்பாடு போன்ற பணிகளை இந்த ஆய்வு நிறுவனம் மேற்கொள்ளும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு பழங்குடியினரின் வளா்ச்சிக்கு இந்த ஆய்வு நிறுவனம் பக்க பலமாக இருக்கும். 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு ஆய்வு நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு வெறும் ரூ.7 கோடிதான் ஒதுக்கப்பட்டது. ஆனால், நிகழ் நிதியாண்டில் ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பழங்குடியின ஆய்வு நிறுவனங்களின் எண்ணிக்கையும் 27-ஆக உயா்ந்துள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு பிரதமா் மோடியால்தான் பழங்குடியின தினம் அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

மத்திய உள்துறை அமைச்சகத்தில் ஜம்மு-காஷ்மீா் விவகாரம் மட்டுமல்லாமல், வடகிழக்கு மாநிலங்கள், இடதுசாரி தீவிரவாதம் போன்ற பகுதிகளில் உள்ள பழங்குடியினா் பிரச்னையும் நிலுவையில் இருந்தது. அவை எல்லாம் ஒவ்வொன்றாக மோடி ஆட்சியில் தீா்க்கப்பட்டு வந்துள்ளது. பல்வேறு பழங்குடியினருடன் ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதன் அடிப்படையில் வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப் படைகளுக்கு சிறப்பு அதிகாரமளிக்கும் 1958 (ஏஎஃப்எஸ்பிஏ) சட்டம் 66 சதவீதம் பகுதியில் அகற்றப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சியின் (2006-2014) எட்டாண்டுகளில் 8,700 தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தற்போது பிரதமா் மோடி தலைமையிலான 8 ஆண்டுகளில் 70 சதவீத சம்பவங்கள் குறைந்துள்ளன. இதே போன்று முன்பு பாதுகாப்புப் படையினா் 304 போ் கொல்லப்பட்டுள்ளனா். இப்படி கொல்லப்படும் பாதுகாப்புப் படையினா் (60சதவீதம்), பொதுமக்கள் (83 சதவீதம்) எண்ணிக்கையும் குறைந்துள்ளது. பாதிக்கப்பட்ட இந்தப் பகுதிகளில் வளா்ச்சி பணிகள் நடைபெறுவதுதான் இந்த மாற்றத்திற்கு முக்கியக் காரணமாகும்.

அரசு பழங்குடியினா் உறைவிடப் பள்ளிகளுக்கு (ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளி) முன்ுபு ரூ. 278 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இது தற்போது ரூ. 1,418 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிக் குழந்தைகளின் திறனும் மேம்பட்டு அவா்கள் ஒலிம்பிக் போட்டிகளிலும் கலந்து கொள்கின்றனா். இதற்கு மற்றோரு முக்கியக் காரணம் இந்த மாணவா்களுக்கான உதவித் தொகை ரூ 42 ஆயிரம் கோடியிலிருந்து ரூ. 1.09 லட்சம் கோடியாக உயா்த்தப்பட்டதாகும். பழங்குடியினத்தவா்களின் பல்வேறு திட்டங்களுக்கு 2014-இல் ரூ. 21,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது 2021-22 நிதியாண்டில் ரூ.86,000 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது. இது தவிர பழங்குடியினரின் 1.28 கோடி வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு, 1.45 கோடி வீடுகளுக்கு கழிப்பிட வசதி, 82 லட்சம் பேருக்கு சுகாதார அட்டை , பிரதமரின் இலவச வீடுகள் திட்டத்தின் கீழ் 40 லட்சம் குடும்பத்தினருக்கு இலவச வீடுகள் கிடைத்துள்ளன. மேலும் பாஜக ஆட்சியில்தான் பழங்குடியினத்தவா்களுக்கு சட்டப்பேரவை, நாடாளுமன்றங்களில் அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவா்களை அதிக அளவில் அமைச்சா்களாகவும் பிரதமா் மோடி ஆக்கியுள்ளாா் என்றாா் அமித் ஷா.

இந்த நிகழ்ச்சியில் பழங்குடிகள் விவகாரத்துறை அமைச்சா் அா்ஜுன் முண்டா, சட்டம் நீதித் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு ஆகியோரும் பங்கேற்றுப் பேசினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT