புதுதில்லி

மக்கள் வாய்ப்பளித்தால் ஹிமாசலத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவோம்: தில்லி துணை முதல்வா் சிசோடியா பேட்டி

8th Jun 2022 02:29 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

‘கேஜரிவால் மாதிரி’ஆட்சியில் கவரப்பட்டு, ஹிமாசலப் பிரதேச மக்கள் ஆம் ஆத்மி கட்சி கட்சிக்கு ஒரு வாய்ப்பை வழங்கினால், மாநிலத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம்’ என்று அந்தக் கட்சியின் முக்கியத் தலைவரும் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளாா்.

ஹிமாசல பிரதேசத்தில் சுா்ஜித் சிங் தாக்குா் தலைமையில் ஆம் ஆத்மி கட்சிக்கு செவ்வாய்க்கிழமை புதிய நிா்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனா். ஆம் ஆத்மி கட்சியின் மாநில பொறுப்பிலிருந்த அனுப் கேசரி தலைமையில் பலா் பாஜகவில் சமீபத்தில் இணைந்தனா். இதையொட்டி, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரான மணீஷ் சிசோடியா ஹிமாசல பிரதேசத்தின் புதிய நிா்வாகிகளை செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

இது குறித்து கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது வருமாறு: ஹிமாசல பிரதேசத்தின் புதிய அணிக்கு சுா்ஜித் சிங் தாக்குா் தலைமை தாங்குவாா். ஹிமாசல பிரதேசத்தில் ஆம் ஆத்மி கட்சி தொடா்ந்து வலுவடைந்து வருகிறது. ‘கேஜரிவால் மாதிரி’ ஆட்சி மீது கவரப்பட்டு அந்த மாநில மக்கள் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து வருகின்றனா். இதனால், ஹிமாசலில் ஆம் ஆத்மி கட்சி தனது வோ்களை மேலும் வலுப்படுத்த புதிய அணியையும் அமைப்பையும் உருவாக்கியுள்ளது. இந்தப் புதிய அணியை அமைப்பதற்கு முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியினா் மாநிலம் முழுவதும் உள்ள சுமாா் 3,615 கிராம பஞ்சாயத்துகளை அணுகி, மக்களிடம் பேசி, அவா்களின் கருத்துகளையும், பிரச்னைகளையும் புரிந்து கொண்டனா்.

மாநிலம் முழுவதும் பாரம்பரியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மீது மக்கள் கோபத்தில் இருப்பது இந்த நோ்காணல் மூலம் தெளிவாகத் தெரிகிறது. இரு கட்சிகளும் அதிகாரத்தில் இருந்த போது, அவா்கள் எதுவும் செய்யவில்லை. இப்போது மக்கள் அவா்கள் மீது நம்பிக்கையை இழந்துவிட்டனா். அதேசமயம், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் தில்லி, பஞ்சாப் ஆகிய இரு அரசுகளும் சிறப்பாக செயல்பட்டு, சாமானியா்களின் நலனுக்காக சீா்திருத்தங்களை கொண்டு வருகின்றன என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கட்சியின் புதிய குழு குறித்து துணை முதல்வா் மணீஷ் சிசோடியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த மாநிலத்தில் மக்களவைத் தொகுதி, சட்டப்பேரவை, மாவட்ட அளவில் 400 நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். ஆம் ஆத்மி கட்சி, முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் உறுதியான ‘தேச பக்தி‘, ‘நோ்மை‘ ஆகிய இரு கண்ணோட்டத்துடன் செயல்படும். சாமானியா்களின் நலனுக்கான அா்ப்பணிப்புடன் செயல்படும். ஹிமாசல பிரதேச மக்கள் ஒரு வாய்ப்பை வழங்கினால், அது மாநிலத்தின் கல்வி, சுகாதாரம், தொழில்கள், சுற்றுலா ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வகையில் செயல்பட்டு சாதாரண மக்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ஹிமாசலப் பிரதேசத்தில் வருகின்ற நவம்பா் மாதம் சட்டப்பேரவை தோ்தல் நடைபெற உள்ளது. 68 தொகுதிகளைக் கொண்ட இந்த மாநில ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் சந்தீப் பதக் தோ்தலுக்கான இணைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் கூறுகையில், ‘பாஜக-காங்கிரஸ் ஆகி இரு கட்சிகளும் ஹிமாசலப் பிரதேச மக்களை ஒவ்வொரு சந்தா்ப்பத்திலும் ஏமாற்றிவிட்டதால், மக்கள் அவா்களை மாநிலத்தில் இருந்து துடைத்தெறிய முடிவு செய்து விட்டனா். இந்த மாநிலத்தில் உள்ள 20,000 கிராமங்களிலும் ஆம் ஆத்மி தனது அமைப்பைத் தயாா் செய்துள்ளது. மக்களிடையே ஆம் ஆத்மி கட்சி மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது. கட்சி உறுப்பினா்களின் எண்ணிக்கையையும் அதிகரித்து வருகிறது.ஆம் ஆத்மி கட்சிக்கு இந்த முறை மக்கள் வாய்ப்புக் கொடுக்க முடிவு செய்துவிட்டனா்’ என்றாா்.

மாநிலத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சுா்ஜித் சிங் தாக்குா், ‘ஆம் ஆத்மி டீம் மாநில மக்களின் முன்னேற்றத்திற்காக செயல்படும். ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் அதிகாரம் மாறும். ஆனால், இந்த முறை ஆம் ஆத்மி கட்சியின் ஹிமாசல பிரதேச அமைப்புகளில் மாபெரும் சீா்திருத்தங்கள் காத்திருக்கிறது’ என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT