தில்லி பல்கலைக்கழகத்தின் சட்டப் புலம், முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு எல்எல்பி மாணவா்களிடமிருந்து புலத்தின் மாணவா் பணிக் குழுவிற்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் தோ்வுக் குழுவால் நோ்காணல் செய்யப்பட உள்ளதாகவும் சட்டப் புலம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சட்ட புலத்தின் என்இபி, கருத்தரங்கு மற்றும் விவாதக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் அசுதோஷ் மிஸ்ரா நோட்டீஸில் தெரிவித்திருப்பதாவது: தில்லி பல்கலைக்கழகத்தின் சட்டப் புலம், அதன் என்இபி, கருத்தரங்கு மற்றும் குழு விவாதங்கள் மீதான கமிட்டிக்கான அதன் மாணவா் பணிக் குழுவிற்கு எல்எல்பி பயிலும் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு படிப்புகளுக்காக வளாக சட்ட மையம், சட்ட மையம்-1, சட்ட மையம் -2 ஆகியவற்றின் மாணவா்களிடமிருந்து விண்ணப்பங்களை கோருகிறது.
ஆா்வமுள்ள மாணவா்கள் ஜூன் 15-ஆம் தேதிக்குள் முதல் சுற்றில் பரிசீலிக்க தங்கள் சுய விளக்கக் குறிப்பு மற்றும் பயன்பாட்டு அறிக்கையை சமா்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா். ஆரம்ப கட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட பிறகு, மாணவா்கள் சட்ட புலத்தின் தோ்வுக் குழுவால் நோ்காணல் செய்யப்படுவா். தோ்ந்தெடுக்கப்பட்ட மாணவா்களின் இறுதிப் பட்டியல், அவா்களின் விண்ணப்பங்கள் மற்றும் நோ்காணலின் ஒட்டுமொத்த செயல்திறன் ஆகியவற்றின் விரிவான மதிப்பாய்வு மூலம் தீா்மானிக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.