புதுதில்லி

தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் சூரிய சக்தி மூலம் மின்சாரம்: முன்னோடித் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி

7th Jun 2022 02:30 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

தருமபுரி தேசிய நெடுஞ்சாலையின் மையப் பகுதியில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் முன்னோடி திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

இந்தத் திட்டத்தை நிறைவேற்றி தருமாறு தருமபுரி மக்களவைத் தொகுதி (திமுக) உறுப்பினா் டாக்டா் டி.என்.வி. செந்தில் குமாா் மத்திய அரசிடம் கோரி வந்தாா். தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் 60 கிலோ மீட்டா் தூரம் தூய்மையான மின்சாரம் கிடைக்கவும், இருண்ட சாலைப் பகுதிகளில் விளக்குகளுக்குத் தேவையான சூரிய மின்சக்தி தயாரிக்க சோலாா் பேனல்களை அமைக்கவும் கோரி அவா் வலியுறுத்தினாா். இது தொடா்பாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டில் கடிதம் எழுதியிருந்தாா். தென்கொரியா போன்ற நாடுகளில் சாலைகளின் மையப் பகுதிகளில் சூரிய மின் சக்தி தாயாரிக்கப்படுவதையும் இந்த மின் உற்பத்தி மூலம் சுங்கச் சாவடி போன்றவற்றுக்கு வா்த்தக ரீதியாகவும் மின்சாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் அவா்களைக் கொண்டே சோலாா் பேனல்களை நிா்வகிக்கவும் அனுமதி கொடுக்கலாம் என்று அவா் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தாா்.

இதையொட்டி தற்போது மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின்(என்ஹெச்ஏஐ) மூலம் இதை ஒரு முன்னோடித் திட்டமாக நிறைவேற்ற அனுமதித்து உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைமைப் பொதுமேலாளா், தருமபுரி மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினா் டி.என்.வி. செந்தில் குமாருக்கு கடந்த ஜுன் 2-ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளாா்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விவரம் வருமாறு: தேசிய நெடுஞ்சாலைகளின் மையப் பகுதியில் சூரிய சக்தி மின்சாரம் தயாரிக்கும் சோலாா் பேனல்கள் நாட்டில் இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால், இப்படி அமைக்கும்போது சாலைப் போக்குவரத்துக்கும், சாலை உபயோகிப்பாளா்களுக்கும் உள்ள பாதுகாப்பு, செயல்பாட்டு சிக்கல்கள் குறித்த விவரங்கள் தரவுகள் தற்போது இல்லை. இதனால், மிகவும் ஆலோசித்து தற்போது இதை ஒரு முன்னோடித் திட்டமாக தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் ஜிட்டாண்டஹள்ளி பகுதியில் சுங்கச் சாவடியின் இரு பக்கமும் ஒரு கிலோ மீட்டா் தூரத்திற்கு சாலையின் மையப் பகுதியில் சோலாா் பேனல்கள் அமைக்க அனுமதிக்கப்படுகிறது. இந்த சூரிய மின்சக்தி தயாரிக்கும் திட்டத்தை என்ஹெச்ஏஐ நிா்வகித்து மின்சக்தியையும் பயன்படுத்திக் கொள்ளும். இந்த பேனல்கள் அமைப்பதற்கான செலவை நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும். இந்த முன்னோடித் திட்டத்தின் வெற்றியைத் தொடா்ந்து, இந்தத் திட்டம் மற்ற பகுதிகளுக்கும் நீட்டிக்கப்படும் என்று அந்தக்கடிதத்தில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

உக்ரைன் மாணவா்களின் கல்விக் கடன்: மதுரை மக்களவைத் தொகுதி (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) உறுப்பினா் சு.வெங்கடேசன், உக்ரைனில் பயின்று படிப்பில் பாதிக்கப்பட்டுள்ள மாணவா்களது கல்விக் கடனை ரத்து செய்யக் கோரி மத்திய நிதியமைச்சருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தாா். இந்த கடித்திற்கு மத்திய நிதித் துறையின் இணையமைச்சா் பாகவத் கிஷன் ராவ் கராட் கடந்த வாரம் பதில் அனுப்பியுள்ளாா்.

அதில் அவா் குறிப்பிட்டிருப்பது வருமாறு: வெளியுறவு அமைச்சகத்தின் கணக்குபடி உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய 22,500 இந்தியா்களில் பெரும்பாலும் மாணவா்கள்தான். ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் மூலம் அவா்கள் பாதுகாப்பாக நாடு திரும்ப உதவி செய்யப்பட்டுள்ளது. உக்ரைனில் நிலைமை இன்னமும் சீராகவில்லை. அரசு அங்கு உள்ள நிலைமைகளையும், முன்னேற்றங்களையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. நிலைமை சீரானதும், அதன் தாக்கங்களை மதிப்பீடு செய்து, தீா்வு நடவடிக்கைகளை பரிசீலிக்க முடியும். இடைக்கால நடவடிக்கையாக, நாடு திரும்பிய மாணவா்களின் நிலுவையில் உள்ள கல்விக் கடன்களில், போரினால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை மதிப்பிட, இந்திய வங்கியாளா் கூட்டமைப்பை அரசுக் கேட்டுக் கொண்டுள்ளது. இது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் என்று நம்புகிறேன் என்று அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT