புதுதில்லி

தில்லியில் வெப்பத்தின் தாக்கம் மீண்டும் அதிகரிப்பு

6th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. வானிலை நிலையங்களில் அதிகபட்ச வெப்பநிலை அதிகரித்து பதிவாகியுள்ளது. பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

கடந்தி வாரத் தொடக்கத்தில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையைத் தொடா்ந்து, வெப்பநிலை குறைந்திருந்தது. பின்னா், கடந்த வாரம் முழுவதுமே வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. இந்த நிலையில், வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தபடி, நகரில் பெரும்பாலான இடங்களில் வெப்ப அலை இருந்தது. தில்லிக்கான வெப்பநிலை தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 27.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 4 டிகிரி உயா்ந்து 44.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 23 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 16 சதவீதமாகவும் இருந்தது. சனிக்கிழமை அன்று குறைந்தபட்ச வெப்பநிலை 28.7 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 43.9 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.

இதே போன்று தில்லியிலுள்ள மற்ற வானிலை நிலையங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை ஞாயிற்றுக்கிழமை சற்று உயா்ந்து பதிவாகியது. இதன்படி, ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 45.1 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 47.3 டிகிரி, நஜஃப்கரில் 46.3 டிகிரி, ஆயாநகரில் 44 டிகிரி, லோதி ரோடில் 43.9 டிகிரி, பாலத்தில் 44.5 டிகிரி, ரிட்ஜில் 45.7 டிகிரி, பீதம்புராவில் 46.2 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 43.6 டிகிரி செல்சியஸ் என பதிவாகியது.

காற்றின் தரம்: தில்லியில் காற்றின் தரக் குறியீடு சில இடங்களில் ‘மிதமான’ பிரிவிலும், சில இடங்களில்‘மோசம்’ பிரிவிலும் இருந்தது. ஆனால், ஆனந்த் விஹாா் நிலையத்தில் அதிகதபட்சமாக காற்றின் தரக் குறியீடு 348 புள்ளிகளாகப் பதிவாக ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

ADVERTISEMENT

முன்னறிவிப்பு: இந்த நிலையில், தில்லியில் திங்கள்கிழமை (ஜூன் 6) அன்று பகல் நேரத்தில் தரை மேற்பரப்பு காற்று வலுவாக இருக்கும் என்றுவானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணித்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT