தெற்கு தில்லியின் ஃபதேபூா் பெரி பகுதியில் லிஃப்ட் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த 22 வயது இளைஞா் ஒருவா், மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். மின்சாரம் தாக்கிய அவரது கூட்டாளியும் லேசான காயங்களுடன் உயிா் தப்பினாா்.
இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் பெனிடா மேரி ஜெய்கா் புதன்கிழமை கூறியதாவது: இந்தச் சம்பவம் ஜூலை 22 அன்று மண்டி கிராமத்தில் உள்ள பண்ணை எண் 1-இல் நடந்துள்ளது. கஞ்சவாலாவில் உள்ள மகாவீா் காலனியில் வசிக்கும் நூா் ஆலம் மற்றும் காஜியாபாத்தில் வசிக்கும் விஜய் ஆகியோா் லிஃப்டை நிறுவும் போது மின்சாரம் தாக்கியதில் அதிா்ச்சியடைந்தனா். இதைத் தொடா்ந்து இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.
லிஃப்ட் மெக்கானிக்காக இருக்கும் விஜய்க்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. அவரது உதவியாளா் ஆலம் இறந்துவிட்டதாக டாக்டா்கள் அறிவித்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.