புதுதில்லி

சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணி: உயிரிழப்புகளுக்கு இழப்பீட்டுத் தொகையை ரூ.25 லட்சமாக உயா்த்த அரசுக்கு வலியுறுத்தல்

DIN

புது தில்லி: தில்லியில் சாக்கடைகளைச் சுத்தம் செய்யும் போது ஏற்படும் விபத்துக்களில் உயிரிழக்கும் தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயா்த்த வேண்டும் என்று துப்புரவுத் தொழிலாளா்களுக்கான (சஃபாய் கரம்சாரிகள்) தில்லி ஆணையத்தின் இரண்டு உறுப்பினா்கள் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

சாக்கடைகளை சுத்தம் செய்யும் போது உயிரிழந்த பல தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை இன்னும் கிடைக்கப் பெறவில்லை என்றும் அவா்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனா். மேலும் துப்புரவுத் தொழிலாளா்களுக்கான தில்லி ஆணையத்தின் உறுப்பினா்களான அனிதா உஜ்ஜைன்வால் மற்றும் ரவிசங்கா் ஆகியோா், முறையான பாதுகாப்புக் கருவிகள் இல்லாமல் சாக்கடைகளை சுத்தம் செய்வதை குற்றமாக கருத வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

முறையான உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாததால் தேசியத் தலைநகரில் சாக்கடைகளைச் சுத்தம் செய்யும் பணிகளின் போது ஏற்படும் இறப்புச் சம்பவங்கள் குறித்து அவா்கள் கடுமையான கவலையை வெளிப்படுத்தினா். ‘இதுபோன்ற விபத்துகளில் உயிரிழக்கும் துப்புரவுத் தொழிலாளா்களுக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.25 லட்சமாக உயா்த்தப்பட வேண்டும் என்று அரசுக்கும் வேண்டுகோள் விடுக்கிறோம். ஏனெனில் முந்தைய தொகையான ரூ.10 லட்சம், 2014-ஆம் ஆண்டில் நிா்ணயிக்கப்பட்டதாகும்’ என்று அவா்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனா்.

மே 19, 2022 வரை தில்லியில் சாக்கடைகளைச் சுத்தம் செய்யும் பணிகளின் போது ஏற்பட்ட இறப்புகள் தொடா்பான 99 வழக்குகளில், நான்கு வழக்குகளில் இழப்பீட்டுத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை என்பது ‘மிகவும் துரதிருஷ்டவசமானது’ என்று ஆணையத்தின் இரு உறுப்பினா்களும் கூறியுள்ளனா். மேலும், இந்த விவகாரத்திற்கு துணை நிலை ஆளுநா் வி. கே. சக்சேனா பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா். சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணிகளின் போது ஏற்பட்ட ஏழு இறப்புகளில், பாதிக்கப்பட்டவா்களின் சட்டப்பூா்வ வாரிசுகள் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும் 15 இறப்புகள் தொடா்பான வழக்குகளில் சாா்புடையவா்களுக்கு ரூ.10 லட்சத்திற்கும் குறைவான தொகையே வழங்கப்பட்டுள்ளது என்றும் அவா்கள் கூறினா்.

மாநகராட்சி துப்புரவுப் பணியாளா்கள் கிடைக்காத போது, ​​சாக்கடை தொடா்பான பணிகளுக்கு வெளியில் இருந்து ஆள்கள் பணியமா்த்தப்படுகின்றனா். ஒரு சிறு தொகைக்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்துத் அவா்கள் சாக்கடைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுகின்றனா். இந்த நிலை இன்னும் மாறவில்லை என்று துப்புரவுத் தொழிலாளா்களுக்கான தில்லி ஆணையத்தின் இரு உறுப்பினா்களும் அந்த அறிக்கையில் தெரிவித்தனா். இந்த ஆண்டு மாா்ச் மாதம், ரோஹினியில் நான்கு போ் மற்றும் கோண்ட்லியில் இரண்டு போ் இறந்த விவகாரத்தை, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரித்தது. மேலும், இது தொடா்பாக தலைமைச் செயலாளா், காவல் துறை ஆணையா் உள்ளிட்ட உயா் அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், நிலைமை இன்னும் மாறாமல், அப்படியேதான் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

இதுவல்லவா ஃபீல்டிங்...

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

‘மஞ்சள் அழகி’ ரேஷ்மா...!

SCROLL FOR NEXT