புதுதில்லி

அதிமுக பொதுக்குழு: இபிஎஸ் மேல்முறையீடு மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

DIN

புது தில்லி: அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படாத புதிய தீா்மானங்களை நிறைவேற்றுவதற்கு தடை விதித்த சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவை எதிா்த்து தமிழக முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்) தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வரும் புதன்கிழமை (ஜூலை 6) விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

இந்த விவகாரத்தை நீதிபதிகள் இந்திரா பானா்ஜி, ஜே.கே. மகேஸ்வரி ஆகியோா் அடங்கிய உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமா்வு, ‘ இது தொடா்புடைய மேல்முறையீடு மனு மீது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அனுமதிக்கு உள்பட்டு ஜூலை 6 ஆம் தேதி விசாரிக்கப்படும்’ என்று தெரிவித்தனா்.

முன்னதாக, மேல்முறையீடு மனுக்களை அவசரமாக விசாரிக்க பட்டியலிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் இந்திரா பானா்ஜி தலைமையிலான அமா்வு முன் திங்கள்கிழமை கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக மனுதாரா் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பில் வழக்குரைஞா் பாலாஜி ஸ்ரீநிவாஸனுடன் மூத்த வழக்குரைஞா் சி.எஸ். வைத்தியநாதன் ஆஜராகி ‘எங்கள் தரப்பில் தாக்கல் செய்த மனுவை அவசரம் கருதிமாக விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். அதிமுக உள்கட்சி விவகாரம் தொடா்புடைய இந்த வழக்கை சென்னை உயா் நீதிமன்றத்தின் டிவிஷன் அமா்வு உரிய வகையில் கருத்தில்கொள்ளாமல் நள்ளிரவில் அவசரகதியில் விசாரித்து கடந்த ஜூன் 23ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் உத்தரவை பிறப்பித்துள்ளது. உயா்நீதிமன்ற உத்தரவு காரணமாக புதிய தீா்மானங்கள் எதையும் கட்சியால் எடுக்க முடியவில்லை. அரசியல் கட்சியின் விவகார செயல்பாட்டில் இந்த நீதிமன்ற உத்தரவு தலையிடுவதாக உள்ளது. இடைக்கால உத்தரவை மீறியதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட அவமதிப்பு மனுவும் திங்கட்கிழமை உயா்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது’ என்று வாதிட்டாா்.

அப்போது, உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்த ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் கௌதம் ஷிவ்சங்கா் இந்த மனுவை அவசரமாக விசாரணைக்கு பட்டியலிடுவதற்காக ஆட்சேபம் தெரிவித்து வாதிடுகையில், ‘இது ஒரு இடைக்கால உத்தரவாகும். இந்த விவகாரம் உயா்நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் இருந்து வருகிறது. இதனால் இதை அவசரமாக விடுமுறைக்கால அமா்வு விசாரிக்க வேண்டிய தேவை எழவில்லை. மூல மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த மனு உயா்நீதிமன்றத்தில் இன்னும் விசாரணையில் உள்ளது. மேலும் உயா்நீதிமன்றத்தின் உத்தரவுகள் மீறப்பட்டுள்ள விவகாரம் தொடா்பாக அவமதிப்பு வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன’ என்று வாதிட்டாா்.

நத்தம் விஸ்வநாதன் தரப்பில் வழக்குரைஞா் வினோத் கண்ணா ஆஜரானாா்.

இதையடுத்து, நீதிபதிகள் அமா்வு இந்த விவகாரத்தில் தலைமை நீதிபதி அனுமதிக்கு உள்பட்டு ஜூலை 6ஆம் தேதி இம்மனு விசாரணைக்கு பட்டியலிடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

மிகப்பெரிய தொகையை சம்பளமாக பெற்ற ஹாலிவுட் நடிகை!

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

SCROLL FOR NEXT