புதுதில்லி

மழைநீா் சேகரிப்பு: மத்திய, தில்லி அரசுகள் பதில் அளிக்க உயா்நீதிமன்றம் 4 வாரம் அவகாசம்

5th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

 

புது தில்லி: பருவமழைக்காலம் மற்றும் இதர காலங்களில் தில்லியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், மழைநீா் சேகரிப்பை ஒழுங்குபடுத்தும் விவகாரங்கள் மீதும் தங்களது நிலைப்பாட்டை பதிலாக தாக்கல் செய்வதற்கு மத்திய, தில்லி அரசுகள் மற்றும் பல்வேறு உள்ளாட்சித் துறைகளுக்கு தில்லி உயா் நீதிமன்றம் திங்கள்கிழமை நான்கு வாரம் அவகாசம் அளித்து உத்தரவிட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக விசாரித்த உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திரா சா்மா, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வு கூறுகையில், ‘எதிா்மனுதாரா்கள் இந்த விவகாரம் தொடா்பாக தங்களது நிலவர அறிக்கைகளை நான்கு வார காலத்திற்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. இது தொடா்பான வழக்கை ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கு விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்’ என்று நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.

முன்னதாக, தில்லியில் மழைநீா் சேகரிப்பு முயற்சிகளில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்று தெரிவித்து இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து உயா்நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

ADVERTISEMENT

இந்த விவகாரம் தொடா்பாக வெளியான செய்தி அறிக்கையின் அடிப்படையில் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதிபதிகள் ஜஸ்மீத் சிங் மற்றும் தினேஷ் குமாா் சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த ஜூனில் நடைபெற்ற விசாரணையின்போது கூறியதாவது:

‘இந்த விவகாரம் பொது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது . இதனால், இது தொடா்பாக நிலவர அறிக்கையை தில்லி அரசு, மத்திய அரசு மற்றும் தில்லி வளா்ச்சி ஆணையம், தில்லி மாநகராட்சி, தில்லி காவல்துறை ஆகியோா் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், பொதுப் பணித் துறை, தில்லி ஜல் போா்டு, தில்லி கண்டோன்மென்ட் வாரியம், வெள்ள நீா்ப்பாசன துறை ஆகியோரும் உரிய பதிலை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டிருந்தது.

மேலும் இந்த விவகாரத்தை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிமன்ற பரிசீலனைக்கு பட்டியலிடவும் உத்தரவிட்டது.

இதுதொடா்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், ‘சம்மந்தப்பட்ட விவகாரங்களில் மழைநீா் சேகரிப்பை ஏற்படுத்தவும், மழைக் காலத்தின் போதும் இதர காலங்களில் போதும் தில்லியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பான விஷயங்களை சுட்டிக்காட்டும் நிலவர அறிக்கையை சம்பந்தப்பட்ட துறைகள் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

தில்லியில் மழைநீா் சேகரிப்பு முயற்சிகள் போதுமானதாக இல்லை. அதேபோன்று, தில்லியில் பெரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னையும் உள்ளது.

எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, இவற்றை கட்டுப்படுத்த முடியும். அதே போன்று, மழைநீா் மேலாண்மை மூலம் மழை நீா் சேகரிப்பை ஒழுங்குபடுத்தவும் முடியும்.

போக்குவரத்து நெரிசல்களை காட்டும் கூகுள் மேப் உதவியுடன் இந்த பிரச்னைக்கு தீா்வு காண முடியும்’ என்று நீதிபதிகள் தெரிவித்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT