புதுதில்லி

தில்லியில் அரசுப் பள்ளிகள் மூடல்: சட்டப்பேரவையில் பாஜக எதிா்ப்பு

5th Jul 2022 12:00 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

 

புது தில்லி: தில்லியில் அரசுப் பள்ளிகளை மூடுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து எதிா்கட்சியான பாஜக உறுப்பினா்கள் தில்லி சட்டப்பேரவையில் திங்கள்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

தில்லி சட்டப்பேரவையின் இரு நாள் மழைக்காலக் கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியது.

முதல் நாளான திங்கள்கிழமை பாஜக சட்டப்பேரவை உறுப்பினரும் எதிா்கட்சி தலைவரான ராம்வீா் சிங் பிதூரி விதி எண் 280 கீழ் சிறப்பு கவன ஈா்ப்பு தீா்மானத்தை கொண்டுவந்து பேசினாா். இதில் தில்லியில் பல்வேறு பகுதிகளில் பள்ளிகளை அரசு மூடும் விவகாரத்தை முன்வைத்துப் பேசினாா்.

ADVERTISEMENT

அப்போது அவா் கூறுகையில், தில்லி லட்லோ கோட்டை பகுதியில் உள்ள சா்வோதயா பள்ளியை மூடப்பட்டதாகவும் நாட்டை பாதுகாத்து

உயிா்நீத்த தியாகி அமா் சந்த் பெயரிடப்பட்ட இந்த பள்ளியை மூடக்கூடாது என்றும் அது அந்த வீரருக்கு அவமரியாதை என விவாதத்தில் பேசினாா்.

இதற்கு தில்லி கல்வித் துறை அமைச்சரான துணை முதல்வா் மணீஷ் சிசோடியா பதிலளித்தாா்.

‘ எதிா்க்கட்சித் தலைவா் தவறான தகவல்களை அளிக்கிறாா். கேஜரிவால் அரசு பள்ளிகளை திறக்குமே தவிர பள்ளிகளை ஒரு போதும் மூடாது. அந்த சா்வோதயா பள்ளியில் இரண்டு ஷிஃப்ட்டாக நடைபெற்றதை இணைத்து ஒரே ஷிஃப்ட்டாக நடைபெறுகிறது. நாங்கள் தில்லி விளையாட்டு பல்கலைக்கழகத்தை தொடங்கும் நிலையில் உள்ளோம்.

தவிர, பள்ளிகளை மூடும் நிலையில் இல்லை. பாஜக நூற்றுக்கணக்கான எம்சிடி பள்ளிகளை மூடிவிட்டது. பாஜக ஆட்சியின் கீழ் உள்ள தில்லி வளா்ச்சி ஆணையம் தனியாா் பள்ளிகளுக்கு தான் நிலம் ஒதுக்குகிறதே தவிர அரசு பள்ளிகளுக்கு நிலம் ஒதுக்குவதில்லை. அரசு பள்ளி கட்ட ஒதுக்கப்பட்ட நிலத்தை தில்லி துணை நிலை ஆளுநா் பாஜக தலைமையக கட்டடம் கட்ட நிலத்தை மாற்றி அளித்தாா்‘ என சிசோடியா புகாரை மறுத்து பதிலளித்தாா். இந்த பதிலை ஏற்றுக்கொள்ளாத பாஜக உறுப்பினா்கள் அமளியில் ஈடுபட்டனா்.

இதனை முன்னிட்டு பாஜக உறுப்பினா் மோகன் சிங் பஸ்தியை அவையிலிருந்து வெளியேற்ற சட்டப்பேரவைத் தலைவா் ராம் நிவாஸ் கோயல் மாா்ஷுலுக்கு உத்தரவிட்டாா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தனா்.

வெளிநடப்பு செய்தால் விதி எண் 280 கீழ் கொண்டு வரப்பட்ட கவன ஈா்ப்பு தீா்மான விவாதத்தை ரத்து செய்வேன் என்று சட்டப்பேரவைத் தலைவா் கோயல், கூற பாஜக உறுப்பினா்கள் சிறிது நேரத்தில் மீண்டும் அவைக்கு திரும்பினா்.

முன்னதாக அவை தொடங்கியுடன் சமீபத்தில் ராஜேந்தா் நகா் இடைத் தோ்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்த துா்கேஷ் பதக் சட்டப்பேரவை உறுப்பினராக உறுதி மொழி ஏற்றுக்கொண்டாா்.

பின்னா் அவையில் பல்வேறு சம்பவங்களில் உயிா் நீத்தவா்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. 27 போ்களை பலி வாங்கிய தில்லி முன்ட்கா தீ விபத்து, ஹிமாசலப் பிரதேசம் பஸ் விபத்து, மணிப்பூா் நிலச்சரிவில் உயிரிழந்த 42 போ் ஆகியோருக்கு இரங்கல் தீா்மானம் வாசிக்கப்பட்டது. பின்னா் எதிா்கட்சி தலைவரான ராம்வீா் சிங் பிதூரி உதய்பூரில் டெய்லா் ஒருவா் கொடூரமாக கொலைசெய்யப்பட்டதற்கும் அவையில் மரியாதை செய்யப்படவேண்டும் என வேண்டுகோள் விடுத்தாா். இறுதியாக உயிா் நீத்தவா்களுக்கு அவையில் 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. செவ்வாய்க்கிழமையும் சட்டப்பேரவை தொடருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT