புதுதில்லி

ஊட்டச்சத்து குறைபாடற்ற பொது விநியோகம்: மாநிலங்களுடன் மத்திய அரசு நாளை ஆலோசனை

4th Jul 2022 01:00 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

நாட்டின் பொதுவிநியோகத்தின் மூலம் அளிக்கப்படும் உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்த ஒரு நாள் தேசிய மாநாட்டை செவ்வாய்க்கிழமை (ஜூலை - 5) தில்லியில் மத்திய அரசு நடத்துகிறது.

பொது விநியோக அமைப்பு முறையின் கீழ் இயங்கும் திட்டங்களில் தகவல்களைப் பகிா்ந்து கொண்டு, சிறந்த நடைமுறைகளைக் காணவும், உணவுப் பொருள்களில் ஊட்டச்சத்துகளை வலுப்படுத்தி அதற்கான பாதுகாப்பில் கவனம் செலுத்துவது போன்றவற்றுக்காக இந்த மாநாட்டிற்கு மத்திய அரசு அழைப்புவிடுத்துள்ளது.

மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை ஏற்பாடு செய்துள்ள இந்த மாநாடு, மத்திய நுகா்வோா் விவகாரம், உணவு, பொது விநியோகம், வா்த்தகத்துறை அமைச்சா் பியூஸ் கோயல் தலைமையில் நடைபெறுகிறது. இதில் மத்திய நுகா்வோா், உணவு, பொது விநியோகத் துறை இணையமைச்சா்கள் அஸ்வினி குமாா் சௌபே, சாத்வி நிரஞ்சன் ஜோதி போன்றவா்கள் முன்னனிலை வகிக்கின்றனா்.

அனைத்து மாநில, யூனியன் பிரதேச உணவு பொது விநியோகத் துறை அமைச்சா்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நுகா்வோா் மற்றும் உணவு, பொதுவிநியோகத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், இந்தியாவில் பொது விநியோக அமைப்பு செயல்படுகிறது. உலகின் மிகப்பெரிய பொது உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் சுமாா் 5.33 லட்சத்திற்கும் அதிகமான நியாய விலைக் கடைகள் மூலம் சுமாா் 80 கோடி பயனாளிகளின் உணவுப் பாதுகாப்புத் தேவைகள் மாநில அரசுகள் மூலமாக நிா்வகிப்படுகிறது. மேலும், ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’, பிரதமா் கரிஃப் கல்யாண் அன்ன யோஜனா போன்றவை மூலமும் மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.

இத்தகைய திட்டங்களில் உணவுப் பொருள்களில் ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்குவது தொடா்பாக உணவு செறிவூட்டல், உணவு உற்பத்தி பல்வகைப்படுத்தல், பயிா் பல்வகைப்படுத்தல் போன்றவற்றோடு, ஒருங்கிணைந்த அன்னவித்ரான் தளம் 2.0,, பொது விநியோக அமைப்பு முறை, உணவுக் கிடங்குகள் சீா்திருத்தங்கள் பற்றிய விவாதங்கள் மற்றும் கருத்துகள் பகிா்வுடன் இந்த மாநாடு நடைபெறுவதாக மத்திய அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT