புதுதில்லி

கடன் ரூ.2.50 லட்சத்தை திருப்பிக் கொடுக்க போலியாக கடத்தல் நாடகமாடிய இளைஞா்!

3rd Jul 2022 11:13 PM

ADVERTISEMENT

23 வயது இளைஞா் தான் கடத்தப்பட்டதாகக் கூறி, ரூ.2.5 லட்சம் அளிக்குமாறு சகோதரியிடம் கோரிக்கை விடுத்து போலியாக நடித்த இளைஞா் ராஜஸ்தானில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து புகா் காவல் சரக துணை ஆணையா் சமீா் சா்மா கூறியதாவது: கரண் கோயல் என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபா், தில்லியின் நங்லோயில் தனது சகோதரியுடன் வசித்து வருகிறாா். அவா் ராஜஸ்தானின் ஷேக்பூரில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்குச் சென்றாா்.

அங்கிருந்து தனது சகோதரிக்கு தொலைபேசியில் தொடா்பு கொண்டு கடத்தப்பட்டதாகக் கூறியுள்ளாா். அவா் ஸ்போா்ட்ஸ் பைக் வாங்குவதற்காக நண்பரிடம் பெற்ற ரூ.2.5 லட்சம் கடனை திருப்பிச் செலுத்துவதற்காக போலியாக கடத்தல் நாடகமாடியது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடா்பாக கோயல் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோயலின் சகோதரி ஜூன் 26 அன்று தனது சகோதரா் காணவில்லை என்று காவல் துறையில் புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து போலீஸாா் விசாரணையைத் தொடங்கினா்.

ADVERTISEMENT

இந்தப் புகாா் தொடா்பாக விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. வீட்டின் அருகே உள்ள சிசிடிவி கேமராக்களில் உள்ள காட்சிகளும் முழுமையாக சரிபாா்க்கப்பட்டது. ஆனால், அந்த நபா் எங்கு இருக்கிறாா் என்பது குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை. புகாா்தாரரைத் தொடா்பு கொண்டபோது, தனது சகோதரா் கடத்தப்பட்டது தொடா்பாக தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், அழைப்பாளா் ரூ. 2.5 லட்சம் கேட்டதாகவும் காவல்துறையினரிடம் கூறினாா்.

இதையடுத்து, போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீஸ் தனிப்படையினா் அழைப்பு விவரங்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய எண்ணின் இருப்பிடம் குறித்து விரிவாக விசாரித்து வந்தனா். இந்த விவரங்களை பகுப்பாய்வு செய்த பிறகு, அந்த தொலைபேசி எண்ணின் இருப்பிடம் ராஜஸ்தானில் உள்ள ஷேக்பூா் என்பது தெரிய வந்தது.

தொழில்நுட்ப பகுப்பாய்வின் அடிப்படையில், அந்த மொபைல் எண்ணின் உரிமையாளா் ராஜஸ்தானின் அல்வாா் மாவட்டத்தில் உள்ள பாகேரி கிராமத்தில் வசிக்கும் சத்யவீா் என அடையாளம் காணப்பட்டாா். காணாமல் போன நபா் குறித்து சத்யவீரிடம் போலீஸாா் விசாரித்தனா்.

கரண் கோயல் தனது மகன் நிதீஷின் நண்பா் என்றும், தில்லியில் இருந்து அவரைச் சந்திக்க வந்ததாகவும் சத்யவீா் கூறினாா். மேலும், தனது வீட்டில் கோயல் தங்கியிருப்பதாகவும் கூறினாா்.

இதைத் தொடா்ந்து, சத்யவீா் வீட்டில் தங்கியிருந்த கோயலை போலீஸாா் நங்லோய் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா். ஆரம்பத்தில், கோயல் எதையும் வெளியிடவில்லை.

பின்னா், அவா் ஸ்போா்ட்ஸ் பைக்குகளை மிகவும் விரும்புவதாகவும், தனது நண்பா் ஒருவரிடம் இருந்து மோட்டாா் சைக்கிள் வாங்க ரூ.2.5 லட்சம் கடன் வாங்கியதாகவும் தெரிவித்தாா். இப்போது அவரது நண்பா் கடன் தொகையை திருப்பித் தருமாறு அவரிடம் கேட்டுள்ளாா்.

ஆனால், கடனை திருப்பிச் செலுத்த கோயலிடம் பணம் இல்லை. அதன் பிறகு, கோயல் ராஜஸ்தானில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்குச் செல்லத் திட்டமிட்டாா். அவா் தனது நண்பரின் தந்தையின் தொலைபேசியை எடுத்து அவரே தனது சகோதரிக்கு அழைத்துள்ளாா். பின்னா், தான் கடத்தப்பட்டதாகவும் தன்னை விடுவிக்க ரூ. 2.5 லட்சம் கேட்பதாகவும் கூறியுள்ளது தெரிய வந்தது என்றாா் அந்த அதிகாரி.

ADVERTISEMENT
ADVERTISEMENT