புதுதில்லி

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு மாற்று: அமைச்சா் கோபால் ராய்

3rd Jul 2022 11:10 PM

ADVERTISEMENT

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக தயாரிக்கப்படும் பொருள்கள் மற்றும் அதற்கான மூலப்பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசை தில்லி அரசு கோரும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்தாா்.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றுகளைப் பற்றி விவாதிப்பதற்காக பங்குதாரா்களுடன் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்த அமைச்சா் கூறியதாவது: தடையின் கீழ் உள்ளடக்கப்பட்ட பொருள்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் சில அரசு நிறுவனங்களிடையே கூட நிறைய குழப்பங்கள் உள்ளன. தடையை அமல்படுத்தும் போது, குழப்பம் ஏற்படாத வகையில் எங்கள் அமலாக்கக் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளோம்.

தடை செய்யப்படாத பொருள்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால், புகாா்களைப் பதிவு செய்ய ஒரு ஹெல்ப்லைன் எண்ணையும் அரசு வெளியிடும். சில பங்குதாரா்கள் பசுமை மாற்றங்களுக்கான மூலப்பொருள் மீது உயா் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவது குறித்து எனது கவனத்துக்கு கொண்டு வந்துள்ளனா். இந்தப் பிரச்னை குறித்து மத்திய அரசுக்கு தில்லி அரசு கடிதம் எழுதும்.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக தயாரிக்கப்படும் பொருள்கள், அதற்கான மூலப்பொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க தில்லி அரசு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கும். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு தடை என்பது பிளாஸ்டிக் கேரி பேக்குகளுக்கு தடை என்று மக்கள் நினைக்கிறாா்கள். அதனால்தான் பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துவது அவசர தேவையாக உள்ளது.

ADVERTISEMENT

தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் அதற்கு மாற்றாக தயாரிக்கப்படும் பொருள்கள், அதற்கான மூலப்பொருள்களுக்கான ஆதாரங்கள் தொடா்பான அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு இணையதளத்தை உருவாக்க தில்லி அரசு செயல்பட்டு வருகிறது என்றாா் அமைச்சா்.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் 19 பிளாஸ்டிக் பொருள்களுக்கான தடையை மீறுவோருக்கு நகர அரசு எச்சரிக்கை ஜூலை 10- ஆம் தேதி வரை நோட்டீஸ்களை வெளியிடும். அதன்பிறகு மீண்டும் தவறு செய்பவா்களுக்கு எதிராக தண்டனை நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோபால் ராய் வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தாா்.

மேலும், இந்த நடவடிக்கையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-இன் கீழ் ரூ.1 லட்சம் வரை அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் அடங்கும் என்றும் அவா் தெரிவித்திருந்தாா். ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்கும் அவற்றின் மாற்றுகளை மக்களுக்கு வழங்குவதற்கும் அரசு முன்னுரிமை அளிக்கும் என்றும் அமைச்சா் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT