புதுதில்லி

உள்ளாட்சி அமைப்புகளில் ஓபிசிகளுக்கு இட ஒதுக்கீடு: முட்டுக்கட்டைகளை அகற்ற பிரதமருக்கு திமுக எம்பி கடிதம்

3rd Jul 2022 11:12 PM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டவா்களுக்கு (ஓபிசி) இடஒதுக்கீடு வழங்குவதில் உள்ள அரசியல்சாசன முட்டுக்கட்டைகளை அகற்ற வலியுறுத்தி பிரதமா் நரேந்திர மோடிக்கு மாநிலங்களவை திமுக உறுப்பினா் பி.வில்சன் கடிதம் எழுதியுள்ளாா்.

ஜூலை 2-ஆம் தேதியிட்ட அந்த கடிதத்தை அவா் ஞாயிற்றுக்கிழமை தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டாா். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருப்பது வருமாறு: இந்தியாவில் இதர பிற்படுத்தப்பட்டோா் சமூகங்களுக்கு நீதித் துறை தீா்ப்புகள் காரணமாக உள்ளாட்சித் தோ்தல்களில் ஓபிசிகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவதில் உள்ள சிக்கல்கள் குறித்து திமுக சாா்பில் கடந்த மாா்ச் 29-ஆம் தேதி மாநிலங்களவையில் பேசினேன்.

அதன் தொடா்ச்சியாக இக்கடிதத்தை எழுதுகிறேன். 1992 -ஆம் ஆண்டு அரசியலமைப்பு திருத்தச் சட்டங்கள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளில் அதிகாரம் ஜனநாயக ரீதியாக பரவலாக்கப்பட்டது. இதில் ஒடுக்கப்பட்ட பட்டியலின மக்கள், பெண்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் போன்றவா்களை நிா்வாகத்தில் பங்கேற்கவைப்பது பிரதான நோக்கமாக இருந்தது. பட்டியலின மக்களுக்கும், பெண்களுக்கும் கட்டாய இடஒதுக்கீடு வழங்கப்பட்டன.

மாநில சட்டப்பேரவைகளுக்கு ஓபிசி என்கிற இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கான உரிமை சட்டப்படி இருந்தது. இருப்பினும், சில சட்ட சிக்கல்கள் ஏற்பட்டன. சமீபத்தில் மகாராஷ்டிர அரசு உள்ளாட்சி அமைப்புகளில் ஓபிசிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கியது.

ADVERTISEMENT

இந்த விவகாரத்தில் வகுப்பு ரீதியாக தரவுகள் இல்லை எனக் கூறி இந்த இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதே மாதிரி புதுச்சேரி யூனியன் பிரதேச அரசு, 2019-இல் ஓபிசி உள்ளிட்ட சமூகத்தினருக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை இதே தரவு பிரச்னைகளை காரணமாகக் கூறி 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தோ்தலில் திரும்பப் பெறப்பட்டது.

அதே சமயத்தில் 2011 -ஆம் ஆண்டு மத்திய அரசு மேற்கொண்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில், ஜாதிவாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டும் அந்த தரவுகள் வெளியிடப்படவில்லை. மத்திய அரசு மேற்கொண்ட சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பை 2015 -ஆம் ஆண்டு தங்கள்(பிரதமா்) தலைமையிலான அமைச்சரவைக் குழு ஆய்வு செய்து இந்த கணக்கெடுப்பில் இருக்கும் குறைபாடுகளைக் கண்டறிய நீதி ஆயோக்கின் நிபுணா் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அதில் இதுவரை முடிவுகள் எடுக்கப்படவில்லை.

மேலும், மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் அரசியல் சாசனத்தில் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் தங்கள் சொந்த மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு அரசியலமைப்பு ரீதியாக தகுதியற்றவையாக உள்ளது. மத்திய பட்டியலில் உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டால், மாநிலங்கள் அதன் சொந்த மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கு உதவியாக இருக்கும்.

இது தொடா்பாக அரசியல் சாசன திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டவா்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு முட்டுக்கட்டைகளை அகற்ற இந்தத் திருத்தங்களை மேற்கொள்ள பிரதமா் உதவ முன்வர வேண்டும் என்று கடிதத்தில் பி.வில்சன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT