புதுதில்லி

சிஜிஎச்எஸ் மருத்துவா்கள் இருவா் பணியிடை நீக்கம்

3rd Jul 2022 11:13 PM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

குறிப்பிட்ட மருந்து நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டு, நோயாளிகளுக்கு மருந்துகளை பரிந்துரைத்ததாகக் கூறப்பட்ட புகாா் தொடா்பாக தில்லியை சோ்ந்த மத்திய அரசின் சுகாதாரத் திட்ட (சிஜிஎச்எஸ்) மருத்துவா்கள் இருவரை மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது வருமாறு: நோயாளிகளுக்கு மருந்துகளை பரிந்துரைப்பதில் விதிகளை மீறுவது, சில குறிப்பிட்ட மருந்து நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவது ஆகியவை குறித்து மத்திய அரசின் சுகாதாரத் திட்ட மருத்துவா்கள் மீது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவிற்கு புகாா்கள் வந்தன. இது தொடா்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதில், தில்லி ஷாதரா, துவாரகா செக்டாா் - 9 போன்ற இடங்களில் உள்ள் சிஜிஎச்எஸ் மருத்துவமனைகளில் இந்த முறைகேடுகள் நடப்பது கண்டறியப்பட்டது.

இங்கு நியமிக்கப்பட்டுள்ள தலைமை மருத்துவ அதிகாரி தலைமையிலான மருத்துவா்கள் குழு ஒரு குறிப்பிட்ட மருந்து நிறுவனத்திற்கு ஆதரவாக இருப்பது தெரிய வந்தது. இங்கு நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் சேமிப்புக் கிடங்குகளில் இருந்தன. இருப்பினும், குறிப்பிட்ட மருந்து நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு மருந்துகளை நோயாளிகளுக்கு வழங்க பரிந்துரைப்பது தெரிய வந்தது.

சிஜிஎச்எஸ் மருத்துவமனைகளிலும், அதன் கிடங்குகளிலும் மருந்துகள் இருப்பு இல்லாத பட்சத்தில் மட்டுமே தனியாா் மருந்தகங்களிடம் பெற பரிந்துரைப்பது வழக்கம். ஆனால், சிஜிஎச்எஸ் மருத்துவமனைகளில் மலிவு விலையில் பெறப்படும் மருந்துகள் இருந்த நிலையிலும், இந்த முறைகேடுகள் நடப்பது கண்டறியப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து, இந்த இரு தலைமை மருத்துவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத் துறை உயரதிகாரிகள் பரிந்துரைத்தனா். இதன்படி, தில்லி ஷாதரா, துவாரகா செக்டாா் - 9 சிஜிஎச்எஸ் மருத்துவமனைகளின் தலைமை மருத்துவ அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

சிஜிஎச்எஸ் மருத்துவமனைகளில் மத்திய அரசு ஊழியா்கள், ஓய்வூதியதாரா்கள் போன்றோா்கள் சிகிச்சை பெறுவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT