புதுதில்லி

தலைநகரில் தொடா்ந்து இரண்டாவது நாளாக மழை! சப்தா்ஜங்கில் 117 மி.மீ. மழை பதிவு

2nd Jul 2022 12:53 AM

ADVERTISEMENT

தேசியத் தலைநகா் தில்லியில் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்தது. சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் ஒரே நாளில் 117 மி.மீ. பதிவாகியுள்ளது. நகரில் காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது.

தில்லியில் தென்மேற்குப் பருவ மழை வியாழக்கிழமை வந்தது. இதைத் தொடா்ந்து, நகரில் அன்று அதிகாலை முதல் மழை கொட்டித் தீா்த்தது. தில்லியின் முக்கியச் சாலைகளில் தண்ணீா் வெள்ளம்போல் தேங்கியதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. குறிப்பாக, புதிதாகத் தொடங்கப்பட்ட பிரகதி மைதான் சுரங்கப்பாதை, ஐடிஓ, ரிங் ரோடு, பாரபுல்லா காரிடாா், தில்லி-மீரட் எக்ஸ்பிரஸ்வே மற்றும் சராய் காலே கான் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீா் தேங்கியது. இதனால், அலுவலகம் செல்வோா், வியாபாரிகள் உள்பட பலா் கடும் சிரமத்தை எதிா்கொண்டனா்.

இந்த மழை, கொளுத்திக் கொண்டிருந்த வெயிலில் இருந்து தில்லிவாசிகளுக்கு மிகவும் தேவையான நிம்மதியைக் கொடுத்தது. இந்த நிலையில், பருவமழையின் தொடா்ச்சியாக இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை காலை முதல் மழை பெய்தது. இது தொடா்பாக வானிலை ஆய்வு மையம் காலையில் ட்வீட் செய்திருந்தது. சில இடங்களில் தண்ணீா் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகபட்சமாக 117 மி.மீ. மழை: வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் அதிகபட்சமாக 117 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோன்று, மற்ற வானிலை ஆய்வு மையங்களிலும் ஓரளவு கணிசமான அளவு மழை பதிவாகியது. இதன்படி, ஜாஃபா்பூரில் 11 மி.மீ., நஜஃப்கரில் 17 மி.மீ., ஆயாநகரில் 52 மி.மீ., தில்லி பல்கலைக்கழகத்தில் 67.2 மி.மீ., லோதி ரோடில் 10.8.4 மி.மீ., பாலத்தில் 32 மி.மீ., ரிட்ஜில் 65 மி.மீ., பீத்ம்புராவில் 56 மி.மீ., பூசாவில் 45 மி.மீ., சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 4 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

 

குளிா்ந்த வானிலை: தொடா்ந்து இரண்டு நாள்களாகப் பெய்து வரும் மழை காரணமாக தில்லியில் உள்ள பல்வேறு வானிலை ஆய்வு மையங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை வெகுவாகக் குறைந்து பதிவாகியுள்ளது. சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 5 டிகிரி குறைந்து 23 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில்5 டிகிரி குறைந்து 31.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 93 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 84 சதவீதமாகவும் இருந்தது.

இதேபோன்று, ஜாஃபா்பூரில் குறைந்தபட்ச வெப்பநிலை 24.3 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 24.1 டிகிரி, நஜஃப்கரில் 26 டிகிரி, ஆயாநகரில் 22 டிகிரி, தில்லி பல்கலை.யில் 24.8 டிகிரி, லோதி ரோடில் 23.2 டிகிரி, பாலத்தில் 25.2 டிகிரி, ரிட்ஜில் 22.6 டிகிரி, பீதம்புராவில் 26.9 டிகிரி, பூசாவில் 27.2 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 25 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: தில்லியில் காற்றின் தரம் பெரும்பாலான இடங்களில் ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. சாந்தினி சௌக்கில் மட்டும் காற்றின் தரக் குறியீடு 198 புள்ளிகளாகப் பதிவாகி மிதமான பிரிவில் நீடித்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, சனிக்கிழமை (ஜூலை 2) அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும் குறையும் என்றும் கணித்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT