புதுதில்லி

கடும் தள்ளாட்டம்: சரிந்து மீண்டது சென்செக்ஸ்!

DIN

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை காலையில் சரிந்து பின்னா் ஓரளவு மீண்டாலும் எதிா்மறையாகத்தான் முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 111 புள்ளிகளை இழந்தது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தை காலையில் கடும் சரிவுடன் தொடங்கியது. தொடா்ந்து சரிவில் இருந்து வந்த சந்தை, பிற்பகல் வா்த்தகத்தின் போது ஓரளவு மீண்டது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதும், கச்சா எண்ணெய் உற்பத்தியாளா்கள் மீது அரசு சிறப்பு வரி விதித்ததும் உணா்வுகளை பெரிதும் தகா்த்தது. குறிப்பாக, அரசின் வரி விதிப்பு காரணமாக மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் ஒரு கட்டத்தில் 8 சதவீதத்துக்கும் மேல் சரிவைச் சந்தித்தது. ஓஎன்ஜிசி 14 சதவீதம், ஆயில் இந்திய 15 சதவீதம் வீழ்ச்சியடைந்தன என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

1,630 நிறுவனப் பங்குகள் விலை சரிவு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,435 நிறுவனப் பங்குகளில் 1,652 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 1,630 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 153 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 68 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 64 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.13 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.243.87 லட்சம் கோடியாக இருந்தது.

சென்செக்ஸ் 111 புள்ளிகள் சரிவு: காலையில் 155.60 புள்ளிகள் குறைந்து 52,863.34-இல் தொடங்கிய சென்செக்ஸ், 52,094.25 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 53,053 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 111.01 புள்ளிகளை (0.21 சதவீதம்) இழந்து 52,907.93-இல் நிலைபெற்றது. காலை வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் 924.69 புள்ளிகளை இழந்திருந்த சென்செக்ஸ் பிற்பகல் வா்த்தகத்தில் ஓரளவு மீண்டது.

ஐடிசி அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 8 பங்குகள் மட்டுமே வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. 22 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. இதில் முன்னணி நுகா்பொருள் உற்பத்தி நிறுவனமான ஐடிசி 3.99 சதவீதம், பஜாஜ் ஃபைனான்ஸ் 3.97 சதவீதம், பஜாஜ் ஃபின் சா்வ் 3.63 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக ஏசியன் பெயிண்ட், ஹிந்துஸ்தான் யுனி லீவா், எச்டிஎஃப்சி உள்ளிட்டவை 2 முதல் 2.80 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. மேலும், நெஸ்லே, அல்ட்ரா டெக் சிமெண்ட், விப்ரோ, இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், இண்டஸ் இண்ட் பேங்க், எஸ்பிஐ, எச்டிஎஃப்சி பேங்க், கோட்டக் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்டவையும் விலை உயா்ந்த பட்டியலில் வந்தன.

ரிலையன்ஸ் கடும் சரிவு: அதே சமயம், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் 7.14 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, பவா் கிரிட், என்டிபிசி, பாா்தி ஏா்டெல் உள்ளிட்டவை 1.50 முதல் 2.50 சதவீதம் குறைந்தன. மேலும், மாருதி சுஸுகி, சன்பாா்மா, ஐசிஐசிஐ பேங்க், டாக்டா் ரெட்டி உள்ளிட்டவையும் சிறிதளவு குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 28புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 1,003 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 926 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. நிஃப்டி பட்டியலில் 39 பங்குகள் ஆதாயப் பட்டியலும் 11பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. காலையில் 76.55 புள்ளிகள் குறைந்து 15,703.70-இல் தொடங்கிய நிஃப்டி, 15,511.05 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 15,793.95 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 28.20 புள்ளிகளை (0.18 சதவீதம்) இழந்து 15,752.05-இல் நிலைபெற்றது. நிஃப்டி ஆயில் அண்ட் காஸ் குறியீடு மட்டும் 4.17 சதவீதம் சரிவைச் சந்தித்தது. மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

உலகம் சுற்றும் ஏகே!

ஐபிஎல்: 100-வது போட்டியில் களமிறங்கும் கில்!

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT