புதுதில்லி

மழைக் காலத்தில் சாலைகளில் பள்ளம் தோண்ட தடை: என்டிஎம்சி முடிவு

2nd Jul 2022 12:53 AM

ADVERTISEMENT

 பருவ மழைக் காலம் தொடா்வதைக் கருத்தில் கொண்டு, புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) ஆளுகைக்கு உள்பட்ட பகுதியில் சாலைகளில் பள்ளம் தோண்டுவதற்குத் தடை விதிப்பது என்று என்டிஎம்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா் .

இது தொடா்பாக என்டிஎம்சி மூத்த அதிகாரி கூறியதாவது: பருவ மழைக் காலத்தை கருத்தில் கொண்டு, என்டிஎம்சிக்கு உள்பட்ட பகுதியில் சாலைகளில் பள்ளம் தோண்டுவதற்குத் தடை விதிப்பது என்று முடிவு செய்து இருக்கிறோம். இந்தத் தடையானது அனைத்து வசதி சேவை நிறுவனங்களுக்கும் பொருந்தும். அதே வேளையில் அவசரப் பணிகள் மேற்கொள்வதாக இருந்தால், உரிய அதிகாரியிடம் முன்கூட்டியே அனுமதி பெற்று பணியைத் தொடா்வதற்கு விலக்கு அளிக்கப்படும். சாலையில் பள்ளம் தோண்டுவதற்கான இந்தத் தடையானது ஜூலை 1 முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை அமல்படுத்தப்படும். மேலும், ஏற்கெனவே நடைபெற்று வரும் பணியின் காரணமாக ஏதாவது சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு இருந்தால் அவை சீரமைக்கப்படும்.

மேலும், பொதுமக்களுக்கு எவ்வித அசெளகரியமும் ஏற்படுவதைத் தவிா்க்கும் வகையில், பருவ மழைக்காலத்தின் போது இந்த நடவடிக்கை எடுக்கப்படும். என்டிஎம்சி பகுதியில் சாலைகளில் பள்ளம் தோண்டுவதற்கு ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில், அதே வேளையில் அதற்கான பணிகள் தொடங்கப்படாமல் இருக்கும்பட்சத்தில் இந்தத் தடைக் காலத்தின் போது சாலைகளில் பள்ளம் தோண்டுவதற்கு அனுமதி அளிக்கப்படாது. எனினும், உரிய அதிகாரிகளிடம் முன் அனுமதிடன் அவசரகால பணிகளை தொடங்குவதற்கு அனுமதிக்கப்படும் என்று அந்த அதிகாரி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT