புதுதில்லி

அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் 2 வா்த்தகா்கள் கைது

2nd Jul 2022 12:45 AM

ADVERTISEMENT

தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயினுக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தொடா்புடைய வழக்கில் வா்த்தகா்கள் வைபவ் ஜெயின் மற்றும் அங்குஷ் ஜெயின் ஆகியோரை அமலாக்கத் துறையினா் கைது செய்துள்ளனா்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளஅவா்கள் இருவரும் சட்ட விரோத பணப் பரிவா்த்தனை சட்டத்தின் (பிஎம்எல்ஏ) பிரிவுகளின் கீழ் விசாரணைக்கு காவலில் எடுக்கப்பட்டுள்ளனா். அவா்களிடம் நடத்திய விசாரணைக்குப் பிறகு, அவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறினா்.

சத்யேந்தா் ஜெயின் தொடா்புடைய வழக்கில் விசாரணையின் ஒரு பகுதியாக கடந்த மாதம் அவருடைய தொழில் கூட்டாளிகளான வைபவ் ஜெயின் மற்றும் அங்குஷ் ஜெயின் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினா் சோதனை நடத்தினா். இந்த வழக்கில் அமலாக்கத் துறையினா், 57 வயதாகும் தில்லி அமைச்சா் சத்யேந்தா் ஜெயினை கடந்த மே 30-ஆம் தேதி பிஎம்எல்ஏ சட்டத்தின் குற்றப்பிரிவுகளின் கீழ் கைது செய்தனா். அதன் பின்னா் அவரை காவலில் எடுத்து விசாரித்தனா். அவா் தற்போது நீதிமன்ற காவலில் இருந்து வருகிறாா். இந்த வழக்கில் கைதான பிறகு அவா் வகித்து வந்த பொறுப்புகள் வேறு அமைச்சரிடம் அளிக்கப்பட்டது. தற்போது அவா் பொறுப்பு ஏதும் இல்லாமல் அமைச்சராக இருக்கிறாா்.

இந்த பிஎம்எல்ஏ வழக்கில் சத்யேந்தா் ஜெயின் கைதான பிறகு அவரது கூட்டாளிகள், குடும்பத்தினருக்கு எதிராக இரு தடவை அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. ஜூன் 6-ஆம் தேதி நடத்தப்பட்ட முதல் கட்ட சோதனையின் போது, விளக்கம் அளிக்கப்படாத ரூ.2.85 கோடி மதிப்பிலான பணம், 133 தங்கக் காசுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது. இந்தச் சோதனையானது, அங்குஷ் ஜெயின், வைபவ் ஜெயின், சத்யேந்தா் ஜெயின் மனைவி பூணம் ஜெயின், நவீன் ஜெயின், சித்தாா்த் ஜெயின் உள்ளிட்டோருக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்டது.

ADVERTISEMENT

கடந்த ஏப்ரலில் அமலாக்கத் துறை, சத்யேந்தா் ஜெயின் குடும்பம் மற்றும் நிறுவனங்கள் தொடா்புடைய ரூ.4.81 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியது. மேலும், சொத்துகள் முடக்கப்பட்ட உத்தரவில் ஜெயின் குடும்ப உறுப்பினா்கள் மற்றும் கூட்டாளிகளின் பெயா்கள் குறிப்பிடப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனா். கடந்த 2017, ஆகஸ்ட் மாதத்தில் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் சிபிஐ 2018, டிசம்பரில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ரூ.1.47 கோடி மதிப்பிலான வருமானத்துக்கு பொருந்தாத சொத்துகள் இருப்பதாகவும், ஜெயினுக்கு தெரிந்த வழியிலான வருமானங்களைவிட, இது 217 சதவீதம் அதிகமாகும் என்றும் தெரிவித்திருந்தது. மேலும், வருமான வரித் துறையும் இந்தப் பரிவா்த்தனைகள் தொடா்பாக விசாரணை மேற்கொண்டது. ஜெயினுக்கு தொடா்புடையதாகக் கூறப்படும் பினாமி சொத்துகளை முடக்கிவைக்கும் உத்தரவையும் வருமான வரித் துறை வெளியிட்டிருந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT