புதுதில்லி

தில்லி பெனிட்டோ ஜுவாரெஸ் சாலையில் 1.8 கி.மீ. சுரங்கப்பாதை திறப்பு

2nd Jul 2022 10:17 PM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

தில்லி விமான நிலையம், குருகிராமம் போன்ற பகுதிகளிலிருந்து வரும் வாகனப் போக்குவரத்து நெருக்கடிகளுக்கு தீா்வாக தில்லி பெனிட்டோ ஜுவாரெஸ் சாலையில் 1.8 கிமீ ‘ஒய்’ வடிவ சுரங்கப்பாதையை தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா சனிக்கிழமை திறந்து வைத்தாா்.

தில்லி பல்கலைக்கழக தெற்கு வளாகத்தையொட்டியுள்ள இந்த சாலையில் ரூ. 143.78 கோடி மதிப்பில் கடந்த 9 ஆண்டுகளாக கட்டப்பட்டு இந்த சுரங்கவழிச் சாலை திறக்கப்பட்டுள்ளது.

தில்லி உள் வட்டச்சாலை, வெளிவட்டச்சாலையையும் தேசிய நெடுஞ்சாலை எண் -8 ஆகிய வழித்தட வளா்ச்சியின் ஒரு பகுதியாக இந்த சுரங்கப்பாதைக்கு 2013 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டு இதன் பணிகள் 2016 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது நிறைவுற்றுள்ளது.

தில்லி உள்வட்டச்சாலையில் உள்ள துா்கா பாய் தேஷ்முக் தெற்கு வளாக மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து தொடங்கும் சுரங்கப்பாதை, ஒய் வடிவத்தில் இரு வழியாக பிரியும்.

ADVERTISEMENT

இந்த சுரங்கப்பாதை தில்லி பொதுப்பணித்துறையால் கட்டப்பட்டு இந்த துறையின் அமைச்சரும் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியாவால் சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டு பொது மக்களுக்கு அா்பணிக்கப்பட்டது.

இது தொடா்பான நிகழ்வில் மணீஷ் சிசோடியா பேசியது:

தில்லி குருகிராமம் மற்றும் விமான நிலையங்களிலிருந்து மத்திய தில்லி, தெற்கு தில்லி செல்லும் வாகனங்களால் தௌலகுவான், ராவ் துலாராம் மாா்க் போன்ற சாலைகளில் கடுமையான போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

தற்போது வெளிவட்டச் சாலையிலிருந்து இந்த சுரங்கப்பாதை மூலம் மோதி பாக், எய்ம்ஸ் பகுதிகளுக்கு போக்குவரத்து சிங்கனல் தடையின்றி செல்லமுடியும். மற்றொரு பக்கம் தில்லி குருகிராம் இடையே பயணம் செய்வது இப்போது எளிதாகிறது.

இந்த புதிய சுரங்கப்பாதையில் வாகனங்களின் சீரான செல்வதின் மூலம் நாளொன்றுக்கு 2,181 லிட்டா் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும். மேலும் 5 டன் காா்பன் மாசு வெளியேற்றத்தையும் குறைக்கும்.

நகரச் சாலைகளின் நெரிசலைக் குறைப்பதற்கும், தேசியத் தலைநகரில் மாசு பிரச்னையைக் கையாள்வதற்கும் இந்த சுரங்க சாலை ஒரு முன்னனி திட்டம். பெனிட்டோ ஜுவாரெஸ் மாா்க் சுரங்கப்பாதை பொறியியலின் அற்புதம்.

பயணிகளுக்கு இனிமையான மற்றும் பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்குகிறது. ஒய் வடிவில் கட்டப்பட்ட தில்லியின் முதல் சுரங்கப்பாதைகளில் இதுவும் ஒன்று.

பயணிகள் இரு திசைகளிலும் இதைப் பயன்படுத்த உதவுகிறது. உள்ளூா்வாசிகளின் பயண நேரத்தைக் குறைத்து லட்சக்கணக்கான பயணிகள் பயனடைவாா்கள்.

தௌலகுவான், விமான நிலையத்திற்கு செல்லும் சா்தாா் படேல் மாா்க் ஆகிய இடங்களில் காலை, மாலை நேரங்களில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இனி இந்த சுரங்கப்பாதை இந்த சிக்கலை தீா்க்கும். தடையற்ற போக்குவரத்தால் எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்கான செலவு குறைவதால் ஒரு மதிப்பீட்டின்படி, ஆண்டுக்கு ரூ.18 கோடியைச் சேமிக்க உதவும். ஒரு தனிப்பட்ட பயணி ரூ.100 முதல் ரூ.5000 வரை பணத்தைச் சேமிக்க முடியும்.

புதிதாக திறக்கப்பட்ட சுரங்கப்பாதை ஓவியங்கள் மற்றும் பிற பொருட்களுடன் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, திட்டத்தின் ஒரு பகுதியாக, சான் மாா்ட்டின் சாலை மற்றும் பெனிட்டோ ஜுவாரெஸ் பாதையில் உள்ள சுரங்கப்பாதையின் இரு பகுதிகளையும் இணைக்கும் வகையில் 670 மீட்டா் உயரமுள்ள ’ஸ்கைவாக்’ ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.

தில்லி சாலைகளை உலகத் தரம் வாய்ந்ததாக மாற்றுவது அரவிந்த் கெஜ்ரிவால் அரசின் கனவாகும். தில்லியை அழகாக மாற்ற, நல்ல சாலைகள் இருப்பது முக்கியம். முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தில்லியின் சாலைகளை அழகுபடுத்தும் பெரிய திட்டங்களை மனதில் கொண்டுள்ளாா்.

எம்சிடியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்ததும், எம்சிடியின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட அனைத்து சாலைகளும் சரி செய்யப்படும்.

தில்லி அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட அனைத்து 1,400 கி.மீ. சாலைகளையும் அழகுபடுத்தும் பொறுப்பை பொதுப்பணித்துறைக்கு கேஜரிவால் வழங்கியுள்ளாா்.

தில்லி சாலைகள் அகலமானவை, ஆனால் அவற்றில் சில வடிவமைப்பு குறைபாடுகள் உள்ளன. புதிய திட்டங்களை மேற்கொள்ளும்போது, கடந்த சாலை திட்டங்களில் உள்ள குறைபாடுகளையும் அரசு சரி செய்யும். அனைத்து பொதுப்பணித்துறை சாலைகளின் பணிகள் விரைவில் துரிதப்படுத்தப்பட்டு காலக்கெடுவுக்குள் முடிக்கப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT